அண்ணா பிறந்தநாளில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும்!

Report Print Basu in இந்தியா
93Shares

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளையொட்டி சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும், புத்தாண்டு நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலுள்ள 9 மத்திய சிறைகளில் 800-க்கும் அதிகமான ஆயுள் தண்டனை கைதிகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இராஜிவ் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகியோர் 25 ஆண்டு தண்டனை அனுபவித்தும் இன்னும் சிறைக்கொட்டடியில் அடைத்து வைக்கப்பட்டிருக்கின்றனர்.

கோவை குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் சிறை விதிக்கப்பட்ட பலர் 18 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பிறகும் விடுதலை செய்யப்படவில்லை.

ஆயுள் தண்டனை என்பது நடைமுறையில் 14 ஆண்டு சிறை தண்டனையாக இருக்கும் நிலையில், சிலரை மட்டும் 25 ஆண்டுகளுக்கும் மேலாக அடைத்து வைப்பது மிகப்பெரிய மனித உரிமை மீறல் ஆகும்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வருகிறார். அவரது தந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். கடைசிக் காலத்திலாவது தந்தையின் அருகில் இருக்க வசதியாக தம்மை சிறை விடுப்பில் (பரோல்) அனுப்பும்படி பேரறிவாளன் விடுத்த வேண்டுகோள் தமிழக உள்துறை அமைச்சக கோப்புகளில் தூசு படிந்து கிடக்கிறது. மதுரை சிறையில் வாடும் இரவிச்சந்திரன் பல நோய்களால் பாதிக்கப்பட்டு, அவரது உடல் நாளுக்கு நாள் மெலிந்து வருகிறது.

அவரும் மருத்துவம் பெறுவதற்காக தமக்கு சிறை விடுப்பு வழங்கும்படி விடுத்த கோரிக்கை குப்பையில் வீசப்பட்டிருக்கிறது. இவர்களை விடுதலை செய்வதற்குத் தான் மத்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறதே தவிர சிறை விடுப்பில் அனுப்ப எந்தத் தடையும் இல்லை.

ஆனால், அவர்களைச் பரோலில் அனுப்ப தமிழக அரசு தொடர்ந்து முட்டுக்கட்டை போடுவதை புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்வதற்கு பெருந்தடையாக இருந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக சிறைகளில் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளில் பத்தாண்டு சிறைவாசத்தை நிறைவு செய்த அனைவரையும் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்தநாளில் விடுதலை செய்ய வேண்டும்.

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களையும், மற்ற வழக்குகளில் தண்டனைக்காலம் முடிவடைந்த பிறகும் சிறைகளில் வாடும் கைதிகளையும் அரசியலமைப்புச் சட்டத்தின் 161 பிரிவைப் பயன்படுத்தி ஆளுனர் உத்தரவு மூலம் விடுதலை செய்ய வேண்டும்.

அதில் ஏதேனும் சட்ட சிக்கல் இருப்பதாக தமிழக அரசு கருதினால் அவர்களை நீண்ட சிறை விடுப்பில் அரசு அனுப்ப வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments