ஓடும் ரயிலில் கொள்ளை: பொலிஸ் உடையில் வந்த குற்றவாளி?

Report Print Aravinth in இந்தியா
252Shares

சேலத்திலிருந்து சென்னை ரிசர்வ் வங்கிக்கு ரயிலின் மூலம் கொண்டு செல்லப்பட்ட பணம் 5.78 கோடி ரூபாய் கொள்ளை போன வழக்கில் பொலிஸ் உடையணிந்து வந்த கொள்ளையனை பிடிக்க சிபிசிஐடி பொலிசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

சேலத்தில் இருந்து கடந்த 8ம் திகதி சென்னை சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வ் வங்கிக்கு 342.75 கோடி ரூபாய் பணம் கொண்டு செல்லப்பட்டது.

சென்னை அடைந்தவுடன் எழும்பூர் பார்சல் அலுவலகத்தில் சீலிடப்பட்ட ரயில் பெட்டி, காலை 10.45 மணியளவில் ரிசர்வ் வங்கியின் உதவி மேலாளர் நடராஜன் முன்னிலையில் திறக்கப்பட்டது.

அப்போது ரயில் பெட்டியின் மேற்கூரையில் துளையிடப்பட்டிருந்தது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணையில் 5.78 கோடி ரூபாய் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுவரை குற்றவாளிகள் யார் என தெரியாமல் இருக்கும் நிலையில் பாதுகாப்புக்கு போன உதவி கமிஷனர் உள்பட 9 பொலிசாரும் சொன்னதையே திரும்ப திரும்ப கூறி வருவதால் சிபிசிஐடி பொலிசார் திணறி வருகின்றனர்.

இந்நிலையில், ரயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆர்பிஎப் பொலிசார் இருவர் கொள்ளையர்கள் குறித்த ஒரு தகவலை சந்தேகத்தின் அடிப்படையில் தெரிவித்துள்ளனர்.

ஆர்பிஎப் பொலிசார் கூறியதாவது, சேலத்தில் இருந்து வந்த ரயில் விருத்தாச்சலம் ஸ்டேஷனில் நின்றபோது, பணம் இருந்த பெட்டி அருகே ஒருவர் பொலிஸ் உடையில் இருந்தார். ஆனால் அவர் பொலிஸ்தானா என தெரியவில்லை.

மேலும், அவர்களை பார்க்கும் பொழுது பொலிஸ் அதிகாரி போன்றே தெரியவில்லை. கையில் வைத்திருந்த தொப்பியில் தமிழக காவல்துறை முத்திரை இல்லை எனவும் ஆர்பிஎப் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, கொள்ளையர்கள் பொலிஸ் உடையில் வந்து கண்காணித்தார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆர்பிஎப் பொலிசார் தெரிவித்த அடையாளங்கள் அடிப்படையில், பொலிஸ் உடை அணிந்து வந்தவரின் படம் வரையப்பட்டு உயரதிகாரிகள் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இன்று அல்லது நாளை படம் வெளியிடப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்று பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

மேலும், சேலத்தில் சிபிசிஐடி ஐ.ஜி மகேஷ்குமார் அகர்வால் இன்று விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments