2ம் வகுப்பு மாணவியை பெல்ட்டால் அடித்த ஆசிரியை; மதிப்பெண் மோக விபரீதம்

Report Print Maru Maru in இந்தியா
830Shares

பெங்களூரில் வீட்டுப்பாடம் எழுதாத 2 ம் வகுப்பு மாணவியை பெல்ட்டால் அடித்து, காயப்படுத்திய டியூசன் டீச்சரை பொலிஸார் தேடி வருகின்றனர்.

பெங்களூருவை அடுத்துள்ள நெலமங்களாவில் வசிக்கும் வெங்கடேஷ் என்பவருடைய மகள் பாவனா (7). இவர் தனியார் பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். தனது வீட்டுக்கு பக்கத்தில் வசிக்கும் லதா(40) என்ற ஆசிரியையிடம் டியூசனும் படித்துள்ளார்.

சம்பவத்தன்று பாவனா வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று, ஆத்திரப்பட்ட ஆசிரியை பாவனாவின் குழந்தைப் பருவத்தைக் கூட யோசிக்காமல் காயப்படும் அளவுக்கு பெல்ட்டால் அடித்து துன்புறுத்தியுள்ளார்.

அழுதுகொண்டு, வீட்டுக்கு வந்த பாவனாவின் முதுகில் உள்ள காயத்தைப் பார்த்த பெற்றோர், அதிர்ச்சியடைந்து மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், காவல்நிலையத்திலும் புகர் செய்தனர்.

குடும்பத்தோடு தலைமறைவாகியுள்ள டியூசன் ஆசிரியை லதாவை பொலிஸார் தேடிவருகின்றனர்.

அடிப்பது சரியா? தவறா?

ஆசிரியை மாணவி மீது உள்ள படிப்பு அக்கறையில்தான் அடித்துள்ளார். ஆனாலும், ஒரு குழந்தையை கண்டிக்கிறோம் என்ற நிதானத்தை இழந்திருக்கிறார், இது அவர் செய்த தனிப்பட்ட பெரிய தவறு.

மாணவர்களை அடிப்பது ஒரு நாகரீகமற்ற செயலாக ஒருபுறம் பேசப்படுகிறது. அடிப்பது சரியா? தவறா? என்ற விவாதம் வைத்தால் சரி என்றுதான் அதிகமான பெற்றோர்கள் விவாதிக்கின்றனர்.

மாணவர்களாக இருக்கும்போது, அடிக்கும் ஆசிரியர்களை திட்டுபவர்கள் கூட, பிற்காலத்தில் பெரிய மனிதர்களானதும் இந்த நிலைக்கு நான் வர காரணம் எங்கள் ஆசிரியர்களிடம் வாங்கிய அடிதான் என்று பெருமையாக கூறும் பாணியும் உள்ளது.

மதிப்பெண் மோகம்

ஆனாலும், இப்போது உள்ள மதிப்பெண் மோகம் மாணவர்களை கூண்டுக்கிளி போல அடிமைப்படுத்தி உள்ளது. அதற்கு பெற்றோர்களும் உடந்தை, எங்கள் பிள்ளைகளை என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள்.

ஆனால், பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 500 க்கு 480 மார்க்காவது எடுக்க வையுங்கள் என்ற கோரிக்கை வைக்கும் பெற்றோர்கள் அதிகம்.

அதற்கு காரணம், அதிக மார்க் எடுத்தால், தகுதி அடிப்படையில் உயர் படிப்புகளில் குறைந்த செலவில் சேரலாம். வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்பை பெறலாம்.

நல்ல இடத்தில் பிள்ளைகளுக்கு சம்பந்தம் செய்யலாம். பிள்ளைகள் சொகுசான வாழ்க்கை வாழ்வதை பார்த்துவிட்டு நாம் கண்மூடலாம் என்ற கனவில்தான் பெற்றோர்கள் இப்படிச் செய்கிறார்கள்.

குழந்தைகளிடம் ஊறுவதென்ன?

ஆனால் பாலக பருவமோ, புல் இலைகளை வளைக்கும் பனிமுட்டைகளை உடைக்கவும், வண்ணத்துப்புச்சிகளின் இறக்கைகளை விரல்களில் பிடிக்கவும், மலர் பறித்து, மூக்கில் மோந்து, கன்னங்களை சாய்த்துக்கொள்ளவும், மேகம், நிலவு, நட்சத்திரம் என விஞ்ஞான விழிகளின் ஆய்வு தூரம் வேறு, ஆனால், அதுபற்றிய இந்த அரிச்சுவடி விழிகளின் ஆராய்ச்சிக்கு ஈடு ஏது?.

இத்தகைய பிஞ்சு உள்ளங்கள், பெற்றோர்களின் கனவை இப்போதே எப்படி சுமப்பார்கள்? உணர்வார்கள்? அப்படி திணிப்பது குழந்தைகளை சிதைப்பது. இதில், பெற்றோர்கள், ஆசிரியர்கள், இந்த சமுதாயம் என எல்லாமே குற்றத்தராசில் சம எடையில் நிற்கிறார்கள்.

எதிர்காலத்திற்காக இப்போது சீரழிப்பதா?

இரண்டாம் வகுப்பு படிக்கும் பாவனாவை பள்ளிக்கூட நேரத்துக்கு மேலும், டியூசனுக்கு அனுப்புவது கூட ஒரு கொடுமைதான் என்பது ஏன் அந்த பெற்றோருக்கு புரியவில்லை.

குழந்தைகள் வீட்டில் இருக்கும் நேரத்தில் செய்வதற்கு பள்ளியில் வீட்டுப்பாடம் கொடுக்கிறார்கள். டியூசனுக்கும் செல்வதால் வீட்டில் உண்ண, உறங்க மட்டுமே ஒரு நாளில் மிச்ச நேரம் இருக்கும். இதில் பள்ளியிலும் டியூசனிலும் பல மணிநேரம் செய்யும் வீட்டுப்பாடங்களையும் கொடுப்பவர்கள் குழந்தைகளை புரிந்தவர்களா?

ஒரு ஆசிரியரைப் பார்த்து இன்னொரு ஆசிரியர் என, என்ன விரைவுக்காகவோ குழந்தைகளை சிதைத்து இப்படி தயார்படுத்தும் தவறை செய்கின்றனர்.

இந்த வேகத்திற்கு ஆர்வம் மிகுந்த சில குழந்தைகள் கூட ஈடுகொடுத்துவிடுகின்றன. அதையே பலவிதமான மனநிலையில் உள்ள எல்லா குழந்தைகளிடமும் எதிர்பர்க்கிறார்கள்.

அதற்காக, ஒருவேளை அடித்தாலாவது பயந்து படிப்பார்கள் என்று, இதுபோலவே படித்து வந்த சில ஆசிரியர்கள் நினைக்கின்றனர். அந்த வினோதத்தில்தான் இப்படிப்பட்ட விபரீதங்கள் நடக்கின்றன.

பயமுறுத்தி படிக்க வைக்க வேண்டும் என நினைத்தவுடனே ஆசிரியர்கள் தோற்றுவிடுகிறார்கள். மாணவர்கள் தொலைந்தேவிடுகிறார்கள்.

பெற்றோரை, ஆசிரியரை, பாடத்தை, சமுதாயத்தை என எல்லாவற்றையும் குழந்தைகள் புரிந்து நடக்க வேண்டும் என நினைக்கிறோம். ஆனால், நாம் குழந்தைகளை புரிந்து நடக்க மறுக்கிறோம். இது எவ்வளவு ஆபத்தான முரண்பாடு.

இப்படிப்பட்ட சமூகத்தோடு ஒன்றி, தன்பிள்ளைகள் மீது கூட இரக்கப்படாத மனநிலைக்கு பல பெற்றோர்களும் வந்திருப்பதுதான் பயங்கரம்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments