பழம் பெரும் நடிகர் வியட்நாம் வீடு சுந்தரம் மரணம்! உடல் தகனம் செய்யப்பட்டது

Report Print Fathima Fathima in இந்தியா
2088Shares

பழம் பெரும் திரைப்பட இயக்குநர் வியட்நாம் வீடு சுந்தரம் சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது வீட்டில் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.

1970 ஆண்டு வியட்நாம் வீடு எனும் வெற்றி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சுந்தரம் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினி, கமல் என பல பிரபலங்களுடன் பணியாற்றியுள்ளார்.

நடிகர், எழுத்தாளர் என பன்முகம் கொண்ட சுந்தரம், தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரை நட்சத்திரங்கள் அஞ்சலி

சுந்தரத்தின் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இவருக்கு சிவக்குமார், ஒய்.ஜி மகேந்திரன், சூர்யா, ஜெயம்ரவி, சிவகார்த்திகேயன், குஷ்பு, பூர்ணிமா பாக்கியராஜ், கேவி.ஆனந்த் ராஜேஷ், சிவாஜி குடும்பத்தினர் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

உடல் தகனம்

பின்னர் இன்று மாலை அவரது உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரையுலகம் கண்ட மிகச் சிறந்த திரைக்கதை ஆசிரியர்களில் ஒருவர் வியட்நாம் வீடு சுந்தரம்.

1970ம் ஆண்டு வியட்நாம் வீடு என்ற மாபெரும் வெற்றிப்படத்தின் மூலம் திரைக்கதை ஆசிரியராக திரையுலகில் அறிமுகமானார்.

இவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த நான் ஏன் பிறந்தேன், நாளை நமதே ஆகிய திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

பத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கிய இவர் குடும்பப் பாங்கான திரைப்படங்களை இயக்குவதில் வல்லவர்.

வியட்நாம் வீடு படத்திற்காக தமிழக அரசின் விருது மற்றும் அண்ணா விருதுகளை பெற்றுள்ளார். பழகுவதற்கு எளிமையானவர் இனிமையானவர்.

அவரது மறைவு தமிழ் திரையுலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments