தமிழக சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ மா.சுப்பிரமணியன், பேரவைத் தலைவர் ப.தனபாலை "மாண்புமிகு மேயர்” என்று தவறி அழைத்ததால், அவையில் இருந்த முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் உள்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.
சட்டப்பேரவையில் மா.சுப்பிரமணியன் பேசும்போது, சென்னை மாநகராட்சியின் மேயராக மு.க.ஸ்டாலின் இருந்தபோது செய்த சாதனைகளைக் குறிப்பிட்டுப் பேசினார்.
அப்போது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டு, மா.சுப்பிரமணியன் தற்போது எம்எல்ஏ, மானியக் கோரிக்கையில் தமிழகம் முழுவதுக்கான விவகாரங்கள் தொடர்பாகவே பேச வேண்டும் என்பதை உணர்ந்து பேச வேண்டும் என்று அறிவுரைத்தார்.
அதற்கு மா.சுப்பிரமணியன், சென்னையில் தொடங்கி அப்படியே தமிழகம் முழுவதும் உள்ள விவகாரங்கள் தொடர்பாக பேசப் போகிறேன்'' என்றார்.
ஆனால், மா.சுப்பிரமணியன் திடீரென "மாண்புமிகு மேயர்” என்று பேரவைத் தலைவரைப் பார்த்து அழைத்துவிட்டார்.
இதனால் அவையில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்பட அனைவரும் சிரித்துவிட்டனர்.