திருப்பூர் மருத்துவர் மரணத்தில் உரிய விசாரணை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

Report Print Arbin Arbin in இந்தியா
திருப்பூர் மருத்துவர் மரணத்தில் உரிய விசாரணை வேண்டும்: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
47Shares

திருப்பூர் மருத்துவர் மரணத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தலைநகர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த திருப்பூரை சேர்ந்த பயிற்சி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் கணேசன் என்பவரின் மகனான சரவணன் மதுரை மருத்துவக்கல்லூரியில் முதலில் எம்.பி.பி.எஸ். படித்தவர். பிறகு மருத்துவக்கல்வியில் மேற்படிப்புக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் கடந்த 15 நாள்களுக்கு முன்பு தான் சேர்ந்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் வெளிமாநிலங்களில் கல்வி கற்கச்செல்கிறார்கள். அப்படி படிக்க தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு சரவணன் மரணம் பெரும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.

மாணவன் சரவணனின் மரணம் குறித்து பத்திரிகைகளுக்கு பேட்டியளித்துள்ள அவரது தந்தை கணேசன், என் மகனுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அவர் தற்கொலை செய்திருக்க வாய்ப்பு இல்லை. எனது மகன் உயிரிழந்த சம்பவத்தில் உண்மையை கண்டுபிடிக்க மத்திய அரசும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாணவனை இழந்த தந்தையின் இந்த வேண்டுகோளே மத்திய, மாநில அரசுகள் புறக்கணித்து தள்ளி விட முடியாது. எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க நடக்கும் போட்டியில் மாணவன் சரவணன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்ற வேறொரு சந்தேகமும் மருத்துவர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது.

ஆகவே தமிழக அரசு இனியும் காலதாமதம் செய்யாமல் உடனடியாக சரவணனின் மரணம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிடுமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும்.

மத்திய அரசும் இந்த மரணம் குறித்து உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு, படித்துக் கொண்டிருந்த மாணவனின் உயிர் பறிக்கப்பட்டதில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர வேண்டும்.

வெளிமாநிலங்களில் மேல்படிப்பிற்காகச் செல்லும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் அவசரமாக எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments