திருநங்கையர் பிரச்சினை பற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு: கருணாநிதி வரவேற்பு

Report Print Basu in இந்தியா
திருநங்கையர் பிரச்சினை பற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு: கருணாநிதி வரவேற்பு
119Shares

திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பினை திமுக தலைவர் கருணாநிதி வரவேற்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவு விடக் கோரி திருநங்கைகள் ஸ்வப்னா, கிரேஸ் பானு, செல்வி மனோஜ் பிரேம்குமார், லிவிங் ஸ்மைல் வித்யா, செல்வம் ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 14-ல் திருநங்கைகளுக்கு பல வாய்ப்புகள் தரப்பட்டுள்ளன. இது வெறும் ஏட்டளவில் தான் உள்ளது என்று வாதிட்டுள்ளனர். திருநங்கைகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குமாறு உத்தரவிடவும் கோரப்பட்டுள்ளது.

எனவே, மனுதாரர்களின் கோரிக்கையை தமிழக சமூக நலத் துறை பரிசீலனை செய்து சம்மந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசித்து ஆறு மாதங்களுக்குள் உரிய முடிவை எடுக்க வேண்டும்' என்று உத்தரவிட்டுள்ளனர். இது பெரிதும் வரவேற்கத்தக்கதும், பாராட்டத் தக்கதுமான செய்தியாகும்.

திமுக ஆட்சிப் பொறுப்பிலே இருந்த போது, தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரியம் 15-4-2008 அன்று தொடங்கப்பட்டு திருநங்கைகளுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன. 'திருநங்கைகள் உரிமைகள் மசோதா, 2014' ஒன்றினை மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் திருச்சி சிவா தாக்கல் செய்து அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட திருநங்கைகள் நல வாரியம் மட்டுமன்றி, எந்த நல வாரியமும் அதிமுக ஆட்சியில் முறையாகச் செயல்படவில்லை.

இந்த நிலையில் திருநங்கையரின் கோரிக்கையை சமூக நலத்துறை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறைகளோடு ஆலோசித்து ஆறு மாதங்களுக்குள் உரிய முடிவினை எடுக்க வேண்டுமென்று உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருகிறது'' என திமுக தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments