பீட்சா, பர்கருக்கு "கொழுப்பு வரி": இந்தியாவில் முதல் முறையாக

Report Print Deepthi Deepthi in இந்தியா
பீட்சா, பர்கருக்கு
233Shares

கேரளாவில் பாக்கெட் உணவுகளுக்கு 5 சதவீதமும், பிரபல உணவகங்களில் பரிமாறப்படும் பீட்சா, பர்கர் மற்றும் பாஸ்தா உணவுகளுக்கு 14.5 சதவீத கொழுப்பு வரி விதிக்கப்படும் என அம்மாநில அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மெக்டொனால்டு, பீட்சா போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. எனினும் இந்த புதிய வரிவிதிப்பின் மூலம் ரூ.10 கோடி வரை அரசு கஜானாவுக்கு வருவாய் வரும் என ஆளும் புதிய அரசு எதிர்பார்க்கிறது.

கேரள அரசு கடும் நிதி பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. இதனால் முக்கிய துறைகளை மேம்படுத்த முடியாமல் தவித்து வருகிறது. சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் ஐடி பூங்காக்கள் அமைக்க ரூ.12,000 கோடி நிதி தேவைப்படுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த கேரள நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் நிதிப் பற்றாக்குறையை சமாளிக்க புதிய வரிவிதிப்பு உள்பட பல்வேறு திட்டங்களை வைத்திருப்பதாக தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

ஊழல் ஒழிப்பு, வர்த்தகர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவது போன்ற நடவடிக்கைகள் மூலம் ஆண்டுதோறும் 25 சதவீதம் வரை வரி வருமானத்தை பெருக்க முடியும். மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு பல்வேறு துறைகளில் ரூ.1 லட்சம் கோடி வரை முதலீடுகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதல் வருவாயை பெருக்க பாக்கெட் உணவுகளுக்கு 5 சதவீதமும், பிரபல ரெஸ்டாரெண்டுகளில் பரிமாறப்படும் பிட்சா, பர்கர் மற்றும் பாஸ்தா போன்ற உணவுகளுக்கு 14.5 சதவீதம் கொழுப்பு வரி விதிக்கப்படும். இதன் மூலம் அரசுக்கு கூடுதலாக ரூ.10 கோடி வருவாய் கிடைக்கும்.

வறுமை கோட்டுக்கு கீழ உள்ள குடும்பங்கள் மட்டும் பயனடைந்து வந்த இலவச ரேஷன் திட்டம் இனி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் இணைந்துள்ள குடும்பங்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

இதற்காக ரூ.300 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும். அத்தியாவசிய பொருட்களின் விலையை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ரூ.75 கோடி ஒதுக்கப்படும்.

மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து அரசு பள்ளிகளும் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் சர்வதேச தரத்துக்கு உயர்த்தப்படும். இதற்காக ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. ஜவுளிகள் மீதான வாட் வரி ஒரு சதவீதத்தில் இருந்து 2 சதவீதமாக உயர்த்தப்படுவதால், அரசுக்கு கூடுதலாக ரூ.50 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

இந்தியாவில் "கொழுப்பு வரி" புதிது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments