சுவாதி கொலை வழக்கு: தனிப்படை ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்

Report Print Arbin Arbin in இந்தியா
சுவாதி கொலை வழக்கு: தனிப்படை ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்பவரை கடந்த 24 ஆம் திகதி மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்த கொலைகாரன் செங்கோட்டையில் கைது செய்யப்பட்டார்.

இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்த காவல் துறைக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். முதலமைச்சர் ஜெயலலிதாவும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சுவாதியை கொலை செய்த கொலைகாரனை திட்டம் போட்டு பிடித்தது எங்க ஊரை சேர்ந்த காவல் ஆய்வாளர் என திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதியினர் கொண்டாடி வருகின்றனர்.

தற்போது தென்காசி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றி வரும் பாலமுருகனின் படத்தை சமூக ஊடகங்களில் பதிவிட்டு பெருமை கொள்கின்றனர்.

அம்பத்தூர் பகுதியினர் சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,

தென்காசி ஆய்வாளர் பாலமுருகன் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் பகுதி பாடி தேவர் நகரை சார்ந்தவர் என்பதில் பெருமிதம் கொள்கிறது.

ராம்குமாரை கைது செய்வது குறித்து நேற்று மதியம் நெல்லை பொலிஸ் தலைவர் விக்ரமன் தலைமையில் தீவிர ஆலோசனை மேற்கொண்டனர். இதற்காக தென்காசி ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் புதிய தனிப்படை அமைக்கப் பட்டது.

பகலில் ராம்குமாரை சுற்றி வளைத்தால் கிராமத்தில் பிரச்னை ஏற்படக்கூடும் என்று தனிப்படை பொலிசார் கருதியுள்ளனர்.

எனவே நள்ளிரவில் ராம் குமாரை கைது செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி இரவு 11 மணிக்கு 3 பொலிஸ் வாகனங்களில் பொலிசார் மீனாட்சிபுரம் கிராமத்தை சுற்றி வளைத்தனர். ஒரு பிரிவு பொலிசார் கிராமத்தில் வெளி பகுதியில் அரண் போல நின்றனர். 5 பொலிசார் மட்டும் கிராமத்துக்குள் சென்றனர்.

சரியாக இரவு 11 மணிக்கு ஆய்வாளர் பாலமுருகன் கொலையாளி ராம்குமாரின் வீட்டு கதவை தட்டியுள்ளார்.

ராம்குமாரின் தந்தை பரம சிவம் அப்போது கதவை திறந்துள்ளார். வெளியில் பொலிசாரை பார்த்ததும் கடும் அதிர்ச்சி அடைந்த அவர் பயத்தில் அலறியுள்ளார்.

இதை கேட்டதும் வீட்டுக்குள் படுத்திருந்த ராம்குமார் அலறியடித்தபடி எழுந்துள்ளான்.

பொலிசார் சுற்றிவளைத்துள்ளதை அறிந்து அதிர்ச்சியுடன் அவன் வீட்டின் பின்பக்கமாக ஓடினான். தப்பி செல்ல முயன்ற அவனை ஆய்வாளர் பாலமுருகன் பிடிக்க விரட்டினார்.

ஆனால் துரதிருஷ்டவசமாக ஒரு கல்லில் மோதி தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

இதற்கிடையே தப்பிக்க முடியாது என்று உணர்ந்த ராம் குமார் உடனே அவன் வைத்திருந்த பிளேடால் கழுத்தின் இரு பக்கமும் அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளான். அதற்குள் பொலிசார் அவனை சுற்றி வளைத்தனர். என்று அவர்கள் சமூக வலைப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராம் குமார் பொலிஸ் அதிகாரிகளுடன் பேசும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments