திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை: தெலுங்கானாவில் பயங்கரம்

Report Print Arbin Arbin in இந்தியா
திருமணத்திற்கு மறுத்த இளம்பெண் கழுத்தறுத்து கொலை: தெலுங்கானாவில் பயங்கரம்

தெலுங்கானாவில் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த இளம்பெண்ணை கழுத்தறுத்து கொலை செய்துவிட்டு தப்பிய இளைஞனை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

சென்னையில் மென் பொறியாளர் சுவாதியை வெட்டி கொலை செய்தது போலவே தெலுங்கானாவிலும் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது.

தெலுங்கானா மாநிலத்தில் அடிலாபாத் மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பைன்சா பகுதியில் குடியிருந்து வரும் 19 வயதேயான சந்தியா என்பவரை அதே பகுதியில் வசித்து வரும் 22 வயதான மகேஷ் என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒரு வருடமாக இவர் சந்தியாவை தொடர்ந்து திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு தொல்லை தந்து வந்துள்ளார்.

ஆனால் சந்தியா இதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனிடையே கடந்த சில மாதங்களாக இவரது தொல்லை அதிகமாகவே சந்தியாவின் குடும்பத்தினர் அவருக்கு மற்றொரு இளைஞனுடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரம் அடைந்த மகேஷ், சந்தியா கடைக்கு சென்று திரும்பி வரும் வழியில் இடைமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தியாவின் வயிற்றுப்பகுதியில் ஓங்கி குத்தியுள்ளார்.

இதனையடுத்து ஆத்திரம் தீராத மகேஷ் அந்த பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

கழுத்து அறுபட்டதால் சந்தியா சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனிடையே இந்த களேபரங்களை நேரில் பார்த்து அதிர்ச்சியுற்ற மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

கொலை சம்பவத்தை அடுத்து தப்பிக்க முயன்ற மகேஷை சில மணி நேரத்திலேயே உள்ளூர் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அடிலாபாத் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் நடந்தது சந்தியாவின் வீட்டின் அருகாமையிலேயே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments