இந்த பூங்காவில் அமைதியா? அலறலா? தொடர் கொலைகளால் குலைநடுங்கும் தலைநகரம்

Report Print Maru Maru in இந்தியா
இந்த பூங்காவில் அமைதியா? அலறலா?  தொடர் கொலைகளால் குலைநடுங்கும் தலைநகரம்

பரபரப்போடு எல்லோரும் பணிக்குச் செல்லும் காலை வேளை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் என்ற ஒரு பெரிய பொது இடம், தனியொரு இளைஞனாக சுவாதியை கொடூரமாக கொலை செய்துவிட்டு, பிடிபடாமல் தப்பியும் இருக்கிறான்.

இந்த சம்பவம், பாதுகாப்பு பற்றிய பீதியை பெண்களுக்கு மட்டுமல்ல தலைநகரில் உள்ள எல்லோருக்குமே ஏற்படுத்தியிருக்கிறது.

முதல்வர் உரை

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து ஜூன் 23 ம் தேதி பேசிய முதல்வர் ஜெயலலிதா, ’தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்ந்து வருகிறது, சட்டம் ஒழுங்கை பாதிக்கச் செய்யும் நிகழ்வுகளிலும் குற்றத்தடுப்பு, புலனாய்வு ஆகிய காவல் பணிகளிலும் காவல் துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் பொது அமைதி பாதுகாக்கப்படுகிறது.

எனது தலைமையின் கீழ் காவல் துறையினரின் சிறப்பான பணிகளின் காரணமாக, தமிழ்நாட்டில் குற்ற நிகழ்வுகள் குறைந்து வருகின்றன. தமிழகம் தொடர்ந்து அமைதிப் பூங்காவாக திகழ அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்’ என்று பேசினார்.

முன்பும் பின்புமாக படுகொலைகள்

இப்படி முதல்வர் பேசிய நாளன்றே, ஒரு தாய், மூன்று மகள்கள் என 4 பேர் கொலைசெய்யப்பட்டு கிடந்தது கண்டறியப்பட்டு அது தொடர்பான செய்திகள் பீதியை கிளப்பின.

அதற்கு முந்தின நாளான ஜூன் 22 ம் தேதி, வியாசர்பாடியில் வழக்கறிஞர் ஒருவர் வழிமறித்து, ஒரு கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

முதல்வர் பேசியதற்கு மறுநாளான ஜூன் 24 ம் தேதிதான் தமிழகத்தையே உலுக்கிய நுங்கம்பாக்கம் ரயில்நிலைய படுகொலை நடந்தது.

இந்த பரபரப்பே இன்னும் அடங்காது இருக்கையில், அது நடந்து ஒருநாள் இடைவெளியில் ஜூன் 26 ம் தேதி, சென்னையின் முக்கிய சாலையான நந்தனம் அண்ணா சாலையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை எழும்பூர் பகுதியில் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் ரோகிணி. இவர் மே 30 ம் தேதி, கைகால்கள் கட்டப்பட்டு, கொடூரமாக கொலைசெய்யப்பட்டு கிடந்தார். அன்று அதே பகுதியில் மூதாட்டி ஒருவரும் கழுத்து நெரித்து கொலைசெய்யப்பட்டார்.

சென்னை சூளைமேடு சர்புதீன் தெருவில் வசித்தவர் வழக்கறிஞர் முருகன், ஜூன் 6 ம் தேதி, அவரை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் ஒரு கும்பல் சுற்றி வளைத்து அரிவாளால் வெட்டிக்கொன்றது.

கீழ்ப்பாக்கம் பூந்தமல்லி சாலைப்பகுதியில் வசித்தவர் பாரஸ்மல், இவர் சவுகார்பேட்டையில் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். தகவல் உரிமைச் சட்ட ஆர்வலரும் ஆவார். இவர் வடசென்னை பகுதியில் வரம்புமீறி கட்டப்படும் கட்டடங்களைப் பற்றி, சென்னை மாநகராட்சி மற்றும் சி.எம்.டி.ஏ. நிர்வாகிகளிடம் புகார் செய்துவந்தார்.

அதன் காரணமாக, பல கட்டடங்களுக்கு மாநகராட்சியும் சீல் வைத்துள்ளது. இந்நிலையில், சூளைமேடு பகுதியில் வண்டியில் சென்றுகொண்டிருந்த பாரஸ்மலை ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிவளைத்து வெட்டிக்கொன்றது.

சென்னை கேளம்பாக்கம் அருகே உள்ள தையூர் ஊராட்சி அலுவலகத்தின் பின்புறம் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில், ஜூன் 23 ம் தேதி, ஒருவர் கிடந்தார். போலீஸ் விசாரணையில் அவர் மைலாப்பூரை சேர்ந்த சதீஷ் என்பது தெரிய வந்தது.

சென்னையில் காவல் நிலையங்கள்

சட்டம் ஒழுங்கை பராமரிப்பதற்கு 134 காவல் நிலையங்கள், குற்றத்தை தடுக்க 128 காவல் நிலையங்கள், பெண்களுக்கான பாதுகாப்பை உறுதிசெய்ய 35 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பைக் ரேஸ் உட்பட சாலைப் பிரச்சினைகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள 70 போக்குவரத்து காவல் நிலையங்கள் என அதிகமான பாதுகாப்பு நிலையங்கள் இருக்கின்றன.

பொலிஸார் கருத்து

சென்னையில் தொடர்கொலைகள் நடந்துவரும் நிலையில் ஜூன் 25 ம் தேதி, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே. ராஜேந்திரன் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது, ‘ தாய், மகள்களான நான்கு பெண்கள் கொலைசெய்யப்பட கள்ளக் காதலே காரணம்.

வழக்கறிஞர் முருகனை அவரது மனைவியே ஆட்களை ஏவி கொலைசெய்துள்ளார். முன்விரோதம் காரணமாக பாரஸ்மல் கொலைசெய்யப்பட்டார்.

ஸ்வாதி கொலையயும் தனிநபரே செய்துள்ளார். இந்த சம்பவங்களில் ரவுடிகளோ, கூலிப்படையோ சம்பந்தப்படவில்லை’ என்றார். இதன் மூலம் கொலைக்கான காரணிகளில் உள்ள தடுக்கமுடியாத சிரமத்தை உணர்த்துகிறார்.

பொலிஸ் நடவடிக்கை

ஆனால், அன்று இரவே ஊடகங்களுக்கு பொலிஸ் தரப்பில் அனுப்பப்பட்ட செய்திக்குறிப்பில், வடக்கு மண்டலத்தில் 69 ரவுடிகளும். தெற்கு மண்டலத்தில் 54 பேரும், கிழக்கு மண்டலத்தில் 19 பேரும் மேலும், 12 ரவுடிகளும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூலிப்படை கூறுவதென்ன?

நகரை உலுக்குகிற ஒரு கொடூர கொலை நடந்ததும் ரவுடிகள் மீது திடீரென எடுக்கும் நடவடிக்கை போதுமானதல்ல.

ஒருவன் கொலைகாரானாக உறுதியாக மாறுகிற நிமிடங்களை யாரும் கணித்துவிட முடியாது என்பது உண்மைதான். அப்படி கொலைகளை தடுக்க முடியாது என்பதால்தான் அதற்கு தண்டனை வழிகாணப்பட்டுள்ளது.

திடீரென நடக்கும் சண்டைகளில் நடக்கும் கொலையை அருகிலிருப்பவர்கள் முயன்றால் தடுக்கலாம். அடங்காத வெறுப்பால் ஆற அமர திட்டமிட்டு கொலை செய்வதும் கவனிக்கப்பட்டால் தடுக்கப்படலாம். இவைகள் தடுக்க முடியாமலும் போகலாம்.

ஆனால், பணத்தை வாங்கிக்கொண்டு காட்டுகிற ஆளை வெட்டிச் சாய்க்கும் கூலிப்படை இயங்கும் ஒரு மாநிலத்தை சட்டம் ஒழுங்கு உள்ளதாக ஒப்புக்கொள்ளவே முடியாது.

கூலிப்படை என்பது நிறுவனம் போன்றது, அதில் ஆட்சேர்ப்பு, கற்பித்தல், விளம்பரம், வியாபாரம் எல்லாமே ரகசியமாக நடக்கிறது. அதை கண்டுபிடிக்கும் வலிமை இல்லாத ஒரு காவல் துறை மக்களை பாதுகாக்க நிச்சயமாக பயன்படாது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

Comments