சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த கொலை சம்பவத்தில் தொடர்புடையவர் என சந்தேகிக்கும் நபரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்த இளம்பெண்ணை மர்ம ஆசாமி ஒருவன் திடீரென கத்தியால் தாக்கி கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டான்.
பயணிகள் முன்னிலையில் நடந்த இந்த சம்பவத்தால் ரயில் நிலையத்தில் திடீர் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.
ரயில் நிலையத்தில் கண்காணிப்பு கமெரா இல்லாததால் குற்றவாளியை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதேசமயம் ரயில்நிலையம் அருகே உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவான காட்சியை வைத்து, குற்றவாளி என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரின் புகைப்படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர். அந்த கமெரா பதிவுகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், நுங்கம்பாக்கம் ரயில் நிலையம் உள்ளிட்ட 82 ரயில் நிலையங்களில் கண்காணிப்பு கமெரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக சென்னை மண்டல ரயில்வே மேலாளர் கூறியுள்ளார்.
ரூ.40.5 கோடி செலவில் நடைபெற்று வரும் இந்த பணிகள் இந்த ஆண்டு இறுதியில் நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.