புரோக்கர் மூலம் 7 இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்த கில்லாடி பெண்

Report Print Deepthi Deepthi in இந்தியா

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோணப்பன்சாலை கிராமத்தை சேர்ந்தவர் நடராஜ்.

மாட்டு வியாபாரியான இவரின் மகன் செல்வகுமார். இவருக்கு பெற்றோர் பல ஆண்டுகளாக பெண் பார்த்தும் கிடைக்கவில்லை.

இதனால் புரோக்கர் மூலம் திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகேயுள்ள போதுபட்டி கிராமத்தை சேர்ந்த பவித்ராவை (25) நிச்சயம் செய்து செல்வகுமாருக்க பெற்றோர் 2015 அக்டோபரில் திருமணம் செய்து வைத்தனர்.

இந்நிலையில், கடந்த மே 27ம் திகதி தாராபுரம் காவல் நிலையத்துக்கு வந்த செல்வகுமார், மனைவி பவித்ராவை 15 சவரன் நகைகளுடன் காணவில்லை என புகார் அளித்தார்.

பொலிசார் பவித்ராவை தேடிவந்த நிலையில், அவரது முதல் கணவர் கர்ணன் (35) என்பவருடன் உடுமலை பகுதியில் தலைமறைவாக இருப்பதாகவும், மாரியம்மாள் என்ற உண்மையான பெயரைக் கொண்ட அவர், மாலதி, பவித்ரா, ஏஞ்சலின் என பல்வேறு பெயர்களில் 7 இளைஞர்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.

இவருக்கு முதல் கணவர் கர்ணன் மூலமாக 2 குழந்தைகள் உள்ளதும், பல ஆண்டுகளாக மணப்பெண் கிடைக்காமல் தவிக்கும் இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்துகொண்டு, சில மாதங்கள் குடும்பம் நடத்திவிட்டு, கிடைத்த நகை, பணத்துடன் தலைமறைவாவதை தொழிலாக செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து உடுமலை பேருந்து நிலையத்தில் நின்றிருந்த பவித்ரா என்ற மாரியம்மாள் மற்றும் அவரது முதல் கணவர் கர்ணன் ஆகிய இருவரையும் தாராபுரம் பொலிசார் கைது செய்தனர்.

இந்த திருமண மோசடிக்கு தாராபுரம், உடுமலை, பழனி, திருப்பூர் பகுதிகளைச் சேர்ந்த திருமண புரோக்கர்கள் 9 பேர் உதவி செய்துள்ளனர். இவர்களது விவரம் குறித்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.

கடைசியாக திருமணம் செய்த செல்வகுமாரையும் கை கழுவி விட்டு எட்டாவதாக இன்னொருவரை மணம் முடிக்க முயன்றபோது தான் பொலிசாரிடம் சிக்கியுள்ளார். 8வது திருமணத்துக்காக பட்டுப் புடவை, நகை உள்ளிட்டவையும் வாங்கப்பட்டுள்ளது பொலிசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்த திருமண மோசடியில் ஏமாந்தவர்கள் யார், யார் என்பது குறித்தும், இதில் முதல் கணவர் கர்ணனுக்கு உள்ள தொடர்பு குறித்தும் மாரியம்மாளிடம் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments