மக்கள் நலக்கூட்டணி வேண்டாம்: விஜயகாந்திடம் கூறிய நிர்வாகிகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
மக்கள் நலக்கூட்டணி வேண்டாம்: விஜயகாந்திடம் கூறிய நிர்வாகிகள்

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதா அல்லது மக்கள் நலக் கூட்டணியுடன் போட்டியிடுவதா என்பது தொடர்பாக, தேமுதிக நிர்வாகிகளுடன் கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார்.

சட்டப் பேரவைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்ட தேமுதிக 104 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. 99 சதவீத வேட்பாளர்கள் வைப்புத் தொகையை இழந்தனர். உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட விஜயகாந்தும் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

இந்த நிலையில், மாவட்ட வாரியாக கட்சி நிர்வாகிகளை அழைத்து அவர் பேசி வருகிறார். இதில், "மக்கள் நலக் கூட்டணியுடன் இணைந்து போட்டியிட்டதுதான் தோல்விக்குக் காரணம்' என்று அனைத்து நிர்வாகிகளும் கூறி வருகின்றனர்.

தனித்துப் போட்டி? இந்த நிலையில், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விஜயகாந்த் நேற்று ஆலோசனை நடத்தினார்.

இதில், உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடலாமா அல்லது மக்கள் நலக் கூட்டணியிலேயே தொடரலாமா என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

அப்போது, "தனித்துக்கூட போட்டியிடலாம், மக்கள் நலக்கூட்டணி வேண்டாம்" என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தேமுதிக பொருளாளர் இளங்கோவன், தலைமை நிலையச் செயலர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments