தலைச்சுற்றல்- ஏற்படுவது ஏன்? தெளிவான விளக்கங்களுடன்

Report Print Gokulan Gokulan in ஆரோக்கியம்

வழக்கமாக தலைசுற்றல் என்றால் அநேகம் பேர் அது மூளை தொடர்புள்ள நரம்புக் கோளாறு என்றுதான் நினைக்கின்றனர்.

ஆனால் நிஜத்தில் 80 சதவிகித தலைசுற்றல்கள் காதில் உள்ள கோளாறுகளால் ஏற்படுகிறது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

காது என்பது கேட்பதற்கான உறுப்பு மட்டுமல்ல.. உடலை சமன் செய்வதற்கான முக்கிய செயல்கள் இங்குதான் நடைபெறுகின்றன.

தலைசுற்றலின் காரணங்கள் என்ன ?

கிறுகிறுப்புக்கு அடுத்த நிலைதான் உண்மையான தலைச்சுற்றல்.

காது சரியாக செயல்படாததன் காரணமாக உடல் சமநிலை பாதிப்படையும்போது தலை தனியாகச் சுற்றுவது போலவோ அல்லது சுற்றியுள்ள பொருள்கள் சுற்றுவது போலவோ தோன்றும். இதை ஆங்கில மருத்துவத்தில் ‘வெர்டைகோ’ (Vertigo) என்பர்

இந்த மாதிரித் தலைச்சுற்றல் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தாது.

மிதமான வகை

இந்த வகையில் குமட்டலும் தலைச்சுற்றலும் இருக்கும். சில மணி நேரம் படுத்தபடி ஓய்வு எடுத்தால், இந்த அறிகுறிகள் அவையாகவே மறைந்துவிடும்.

மத்திய வகை

இதில் தலைச்சுற்றல் மற்றும் வாந்தி இரண்டும் இருக்கும். படுத்து இதிலும் படுத்தபடி ஓய்வெடுக்க இவை சரியாகிவிடும்.

தீவிர வகை

இதுதான் அதிக பாதிப்பை விளைவிக்கக் கூடிய வகை. இதில் தலைச்சுற்றலும், வாந்தியும் மோசமாக இருக்கும். தலையை அசைத்தால் இந்த இரண்டும் தீவிரமாகும் நடந்தால் விழுந்து விடுவோம் என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்தும்.

பிற காரணங்கள்

ஒற்றைத் தலைவலி, மிகை ரத்தக்கொழுப்பு , உயர் ரத்தஅழுத்தம், குறை ரத்தஅழுத்தம், ரத்தச் சோகை, ஊட்டச்சத்துக் குறைபாடு, தாழ் சர்க்கரை நோய் ,கட்டுப்படாத நீரிழிவு நோய், கழுத்து எலும்பில் பிரச்சினை, ஆரம்ப கால கர்ப்பம், தைராய்டு பிரச்சினை, இதயத்துடிப்புக் கோளாறுகள், பார்வைக் கோளாறு, மன அழுத்தம், மருந்துகளின் பக்கவிளைவு, தலைக்காயங்கள் உறக்கமின்மை, மலத்தில் ரத்தம் போவது என்று பல காரணங்களால் தலைச்சுற்றல் ஏற்படுவதுண்டு.

பரிசோதனைகள்

பொதுவாக உட்கார்ந்த நிலை மற்றும் படுத்த நிலையில் ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படும். ஆடியோகிராம், சி.டி. ஸ்கேன், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் கழுத்தெலும்பு எக்ஸ்ரே, கண் பரிசோதனை, தைராய்டு பரிசோதனை மற்றும் இதயத்துக்கான பரிசோதனைகளும் தேவைப்படும்.

பயிற்சிகள்

‘ஒரு திசை தலைச்சுற்றல்’ உள்ளவர்களுக்கு மட்டும் மாத்திரை மருந்துகளால் தலைச்சுற்றலைத் தடுக்க முடியாது. சில உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டியது அவசியம் .

படுத்தபடி கண்களைச் சுழற்றுதல், உட்கார்ந்த நிலையில் கழுத்து மற்றும் தோள்பட்டைத் தசைகளுக்குப் பயிற்சி செய்தல் தலையை முன்னும் பின்னும் வளைக்கும் பயிற்சிகள், பக்கவாட்டில் வளைதல், நடந்தபடி பந்தைப் பிடித்தல் போன்ற பயிற்சிகள் செய்வதன் மூலம் இவ்வகை தலைச்சுற்றல்கள் தடுக்கப்படுகின்றன.

உணவுப் பழக்கங்கள்
 • உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
 • அதிகக் கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும்.
 • புகை மது போதை பழக்கங்கள் தவிர்க்கப் பட வேண்டும்
தற்காப்பு முறைகள்
 • தலை சுற்றினால், உடனே தரையில் படுக்கவும். கால்களைச் சற்று உயரமாக வைக்கவும் .
 • படுக்கமுடியாத போது தரையில் உட்கார்ந்து முழங்கால்களில் முகம் புதைத்தபடி அமர்ந்திருக்கலாம்.
 • எழுந்திருக்கும்போது நேராக எழுந்திருக்காமல், பக்கவாட்டில் எழுந்திருக்கவும்
 • எழுந்தவுடன் நடக்க வேண்டாம்.
 • எழுந்ததும் கீழ்நோக்கிக் குனியவோ, சட்டென்று திரும்பவோ முயற்சிப்பதை தவிர்க்கவும்
 • தலையணையைத் தவிர்க்கவும் .
 • புரண்டு படுக்கும்போது திடீரெனப் புரள வேண்டாம்
 • வீட்டிலும், குளியலறை மற்றும் கழிப்பறைகளிலும் வழுக்காத தரைகளை பயன்படுத்தவும் .
 • இரவு விளக்குகளைப் பயன்படுத்தி உறங்க வேண்டும் .
 • மாடிப்படிகளில் ஏறி, இறங்குவதைக் குறைத்தல் நலம்
 • ராட்டினங்களில் சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும்
 • மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு மருந்து சாப்பிடுங்கள்.
 • மன அழுத்தமின்றி வாழப் பழகுங்கள்
 • வாகனம் ஓட்ட வேண்டாம், ஆபத்தான இயந்திரங்களை இயக்க வேண்டாம்.
 • காதுப் பரிசோதனை வருடம் ஒருமுறை செய்துகொள்ளுங்கள்.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers