பாகிஸ்தான் பிரதமர், ரஷ்ய அதிபர் உட்பட பல தலைவர்களை சிக்கலுக்குள்ளாக்கிய பண மோசடி: ஜேர்மானியர்கள் இருவருக்கு பிடிவாரண்ட்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பாகிஸ்தான் பிரதமர், ரஷ்ய அதிபர் உட்பட பல தலைவர்களை சிக்கலுக்குள்ளாக்கிய பண மோசடி தொடர்பாக ஜேர்மானியர்கள் இருவருக்கு சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பனாமா நாட்டிலுள்ள சட்ட நிறுவனம் ஒன்று, பல்வேறு பிரபலங்கள் தங்கள் பணத்தை போலியான நிறுவனங்கள் பெயரில் பதுக்கி வைப்பதற்காக உதவி செய்த விடயத்தை பத்திரிகையாளர்கள் சிலர் உலகுக்கு தெரியப்படுத்தினர்.

ஜேர்மனியில் பிறந்த Jürgen Mossack மற்றும் Ramon Fonseca என்னும் இருவர் Mossack Fonscesca என்ற பெயரில் நிறுவிய நிறுவனத்திலிருந்து, 2016ஆம் ஆண்டு, 11 மில்லியன் ரகசிய நிதி ஆவணங்கள் உட்பட ஏராளமான ஆவணங்கள் லீக்காகின.

அந்த ஆவணங்களால் உலகமே பரபரப்படைந்தது. அந்த விடயம் Panama Papers leak என்று அழைக்கப்படுகிறது.

இந்த விடயம் வெளியானதைத் தொடர்ந்து பல நாட்டுத் தலைவர்கள் பதவியிழந்தனர். ஐஸ்லாந்தின் முன்னாள் பிரதமரான Sigmundur Gunnlaugsson மற்றும் பாகிஸ்தான் பிரதமராக இருந்த நவாஸ் ஷெரீப் ஆகியோர் பதவியைத் துறக்கவேண்டியதாயிற்று.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், அர்ஜெண்டினா, உக்ரைன் மற்றும் சீன அரசியல்வாதிகள் பலருக்கு கடுமையான சிக்கல் ஏற்பட்டது.

உலகம் முழுவதும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் 140 மில்லியன் யூரோக்கள் அபராதமாகவும், வரி வசூலிப்பு முலமாகவும் மீட்கப்பட்டது.

இந்நிலையில், பனாமாவில் வாழும் ஜேர்மானியர்களான Jürgen Mossack மற்றும் Ramon Fonseca ஆகிய இருவர் மீதும் சர்வதேச பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கொலோன் மாகாண அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்