கொரோனாவால் நாட்டில் வேலையில்லாத்திண்டாட்டம் ஏற்படுவதை தடுக்க ஜேர்மனி வகுத்துள்ள திட்டம்

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பொருளாதார வல்லுநர்களால் ஜேர்மனியின் வெற்றிகரமான திட்டம் என வர்ணிக்கப்படும் Kurzarbeit என்னும் திட்டம் மீண்டும் ஜேர்மனியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டம் ஏற்கனவே 2008 - 2009 காலகட்டத்தில் உலகம் முழுவதும் நிதிப்பிரச்சினை ஏற்பட்டபோது அமுலுக்கு வந்து ஜேர்மனியின் தொழிலாளர் சந்தையை நிலைப்படுத்தியது. அந்த காலகட்டத்தில், G7 நாடுகளில் ஜேர்மனி மட்டுமே வேலையில்லாத்திண்டாட்டத்திலிருந்து தப்பியது குறிப்பிடத்தக்கது.

இந்த திட்டத்தின்படி, பணி வழங்குவோர் தங்களிடம் பணி செய்வோரை வேலையில்லை என்று கூறி வீட்டுக்கு அனுப்புவதற்கு பதிலாக, அவர்களது வேலை நேரத்தை மட்டும் குறைப்பார்கள். அதனால் பணியாளருக்கு ஏற்படும் வருவாய் இழப்பை அரசே வழங்கும்.

அப்படிப் பார்க்கும்போது, பணியாளர் வழக்கமாக வாங்கும் ஊதியத்தில் 60 சதவிகிதத்தைப் பெறுவார். அதாவது அவர் தான் வேலை பார்த்த நேரத்திற்கான ஊதியத்தைப் பெற்றுக்கொள்வார். வேலை நேரம் 30 சதவிகிதம் குறையும்போது ஊதிய இழப்பைக் கணக்குப் பார்த்தால், இழப்பு 10 சதவிகிதம் மட்டுமே.

கொரோனா பரவல் நீடிக்கும் காலகட்டத்தைப் பொருத்து இது நான்காவது மாதத்திலிருந்து 70 சதவிகிதமாகவும், ஏழாவது மாதத்திலிருந்து 80 சதவிகிதமாகவும் அதிகரிக்கும்.

இந்த திட்டம்தான் இப்போது ஜேர்மனியில் வேலையில்லாத் திண்டாட்டத்தை தவிர்ப்பதற்காக மீண்டும் கொண்டுவரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலதிக தகவல்களுக்கு

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்