தோல்வியடைந்த மூன்று திருமணங்கள்... ஜேர்மனியில் பெற்ற தாயே தன் குழந்தைகளைக் கொன்றதன் காரணம் குறித்து பொலிசார் தகவல்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனியில் பெண்ணொருவர் தனது ஐந்து குழந்தைகளை கொலை செய்த வழக்கில், அவர் உணர்ச்சி வயப்பட்ட நிலையில், அதீத உணர்ச்சிகளுக்கு ஆளாகி அவர்களை கொலை செய்ததாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.

ஜேர்மனியின் Solingenஇலுள்ள ஒரு வீட்டில் ஐந்து குழந்தைகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டதாக பொலிசாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்ததையடுத்து, பொலிசார் அங்கு விரைந்துள்ளனர்.

அங்கு அவர்கள் சென்றபோது கண்ட காட்சி பொலிசாரையே அழச் செய்துவிட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

பதறிப்போன பொலிசாரில் ஒருவர் ஓடிச் சென்று குழந்தைகளுக்கு உயிர் காக்கும் சிகிச்சைகளைச் செய்திருக்கிறார்.

ஆனால், தற்போது கிடைத்துள்ள செய்தியின்படி, அவர்கள் புதன் அன்றோ அல்லது வியாழன் அன்றோ உயிரிழந்திருக்கலாம் என்பதால் பொலிசாரின் முயற்சி பலனளிக்கவில்லை.

இதற்கிடையில், குழந்தைகளின் தாயான Christiane K (27), தனது மூத்த மகனான Marcel (11)ஐ அழைத்துக்கொண்டு ரயிலில் தனது தாய் வீட்டுக்கு புறப்பட்டுள்ளார். ரயில் Duesseldorf என்ற இடத்துக்கு வந்தபோது, ரயிலிலிருந்து இறங்கிய Christiane, ரயில் தண்டவாளத்தில் குதித்துள்ளார்.

அவருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டாலும், அவருக்கு உயிருக்கு ஆபத்தில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், Christianeஇன் திருமண வாழ்வு குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன. Christiane மூன்று முறை திருமணம் செய்துள்ளார், மூன்று திருமணங்களும் தோல்வியில் முடிந்துள்ளன.

மூன்றாவது கணவரை ஓராண்டுக்கு முன் அவர் பிரிந்துள்ளார். Christianeஇன் ஆறு பிள்ளைகளில் நான்கு பேருக்கு அவர்தான் தந்தையாம்.

அதனால் அவர் உணர்ச்சி வயப்பட்ட நிலையில் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, வாழ்வை முடித்துக்கொள்ள முடிவு செய்திருக்கலாம் என கருதப்படுகிறது.

தற்போது குழந்தைகளின் உடல்கள் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு நஞ்சு கொடுக்கப்பட்டதா, அல்லது மயக்க மருந்து கொடுத்து உறங்கவைத்தபின் அவர்கள் கொல்லப்பட்டார்களா என்பதுபோன்ற கேள்விகளுக்கு பதில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்