ரஷ்யாவுடன் துவங்கியது மோதல்... எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பதால் ஜேர்மனி அதிரடி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு நச்சுப்பொருள் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதையடுத்து ஜேர்மனிக்கும் ரஷ்யாவுக்கும் இடையே மோதல் போக்கு உருவாகியுள்ளது.

ரஷ்ய எதிர்க்கட்சித்தலைவரும், அதிபர் புடினை கடுமையாக விமர்சிப்பவருமான Alexey Navalnyக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

ரஷ்யாவின் எதிர்ப்பையும் மீறி அவர் ஜேர்மனிக்கு கொண்டுவரப்பட்டார். ஜேர்மன் மருத்துவமனையில், Navalnyக்கு விஷம் கொடுக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதுவும், பிரித்தானியாவில் முன்னாள் உளவாளியான Sergei மற்றும் அவரது மகள் Yulia Skripal மீது பிரயோகிக்கப்பட்ட நச்சுப்பொருளான நோவிச்சோக் என்னும் அதே நச்சுப்பொருள் Navalnyக்கு கொடுக்கப்பட்டிருப்பதாக ஜேர்மன் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

அதித் தொடர்ந்து, ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கல், பத்திரிகையாளர் மாநாடு ஒன்றில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவருக்கு விஷம் கொடுக்கப்பட்டு கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கவலையடையச் செய்யும் தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

ஜேர்மன் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maas, இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறியதுடன், ரஷ்யா இந்த விடயத்தை விசாரிக்க வேண்டும் என்றும், ரஷ்ய தூதர் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.

இதற்கிடையில், தங்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ரஷ்யா மறுப்புத் தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், பல நாடுகள் ரஷ்யாவுக்கு ஒரு பாடம் கற்பிக்க இது ஒரு சரியான தருணம் என ஜேர்மனியிடம் தெரிவித்துள்ளன.

ஜேர்மன் நாடாளுமன்ற வெளியுறவு விவகாரங்கள் கமிட்டியின் தலைவரான Norbert Roettgen, புடினுக்கு புரிகிற மாதிரி அவரது பாணியிலேயே அவருக்கு பதிலளிக்கவேண்டும், அது எரிவாயு வியாபாரம் என்கிறார்.

அதாவது, ரஷ்யாவிலிருந்து ஜேர்மனிக்கு நேரடியாக குழாய்கள் மூலம் எரிவாயு வழங்கும் திட்டம் ஒன்றிற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. அதற்கு Nord Stream 2 திட்டம் என்று பெயர்.

அந்த திட்டத்தை முடிக்க அனுமதித்தால், இதுபோல் அரசியல் செய்யும் புடினுக்கு, அது தோதாக அமைந்துவிடும், ஆகவே, அதை நிறுத்தவேண்டும் என்கிறார் Roettgen என்னும் அரசியல்வாதி.

ஏற்கனவே இந்த திட்டம் ஐரோப்பிய ஒன்றியத்தில் கருத்து வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

நாம் நமது கூட்டாளர்களுடன் ரஷ்யாவுக்கு தெளிவான ஒரு செய்தியை தெரிவிக்க விரும்பினால், அதற்கான திட்டம் பொருளாதார உறவுகள் சார்ந்ததாக இருக்கவேண்டும். அதாவது, Nord Stream 2 திட்டம் கைவிடப்படவேண்டும் என்கிறார் முன்னாள் வாஷிங்டன் தூதரான Wolfgang Ischinger.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்