கொரோனாவை எதிர்கொள்ள ஜேர்மன் மருத்துவமனைகள் தயார் இல்லை?

Report Print Balamanuvelan in ஜேர்மனி

சமீபத்தில் ஜேர்மன் மருத்துவமனை ஒன்றிற்கு தன் தோழி ஒருவரை அழைத்துச் சென்ற பிரபல ஊடகவியலாளர் ஒருவர், அந்த மருத்துவமனை கொரோனாவுக்கெதிரான எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்காமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

ஜேர்மனி முழுவதிலும் இருக்கும் மருத்துவமனைகள், வேகமாக பரவிவரும் கொரோனா தொற்றை எதிர்கொள்ள தயாராக இல்லை என தான் கருதுவதாக தெரிவிக்கிறார் Sabine Kinkartz என்ற பிரபல பத்திரிகையாளர்.

Patrick Larscheid என்ற மருத்துவ அதிகாரியும் இதே கருத்தை ஆமோதித்துள்ளார். அவரும் மற்றும் சில சுகாதார அலுவலர்களும் கொரோனாவை எதிர்கொள்ள இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை என்றே கூறியுள்ளனர்.

பெர்லினில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு தனது தோழியை அழைத்துச் சென்றிருக்கிறார் Sabine.

அப்போது அவரது தோழி ஒரு அறைக்குள் அமரவைக்கப்பட, அந்த அறையிலிருந்த ஒரு பெண் பயங்கரமாக இருமிக்கொண்டும் தும்மிக்கொண்டும் இருந்திருக்கிறார். உடனே மருத்துவமனை ஊழியர் ஒருவரை அழைத்த Sabine, அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதா என கேட்டுள்ளார்.

உடனே அந்த ஊழியர் குழப்பமடைந்தவர் போல், எதற்காக என்று கேட்டுள்ளார். Sabine அந்த பெண் பயங்கரமாக இருமிக்கொண்டும் தும்மிக்கொண்டும் இருக்கிறார் அல்லவா என்று கூற, இது ப்ளூ சீஸன், அப்படித்தான் இருக்கும் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

அதன் பின்பு அந்த அறையிலிருந்த நோயாளிகளுக்கு உணவு கொண்டு வந்த நர்ஸும் மாஸ்க் எதுவும் அணியாமலே தங்கள் கட்டில்களில் அமர்ந்திருந்த நோயாளிகளுக்கு உணவு பரிமாறியுள்ளார்.

கடைசி வரை அந்த பெண்ணுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படவேயில்லையாம். அவர் கொரோனா பாதித்த எந்த நாட்டுக்கும் செல்லவும் இல்லை, கொரோனா பாதித்த யாருடனும் தொடர்பும் இல்லை, ஆதலால் அவருக்கு பரிசோதனை தேவை இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மொத்தத்தில் உலகமே கொரோனா பரவுவதை எப்படி தடுப்பது, அதை தடுப்பதற்கான தடுப்பு மருந்து எப்போது தயாராகும் என்ற பரபரப்பில் இருக்க, ஜேர்மனி மருத்துவமனைகளோ கொரோனாவை எதிர்கொள்ள இன்னமும் தயாரானதுபோல் தெரியவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்