ஜேர்மனியை பழிவாங்குவதற்காக ரஷ்யா எடுத்துள்ள நடவடிக்கை!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

பெர்லினிலுள்ள பூங்கா ஒன்றில் வைத்து முன்னாள் செச்சன்ய தளபதி ஒருவர் கொலை செய்யப்பட்டதையடுத்து பெர்லின் இரண்டு ரஷ்யர்களை நாட்டைவிட்டு வெளியேற்றியது.

தற்போது, அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இரண்டு ஜேர்மன் தூதரக அதிகாரிகளை வெளியேற்றுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கையாக ரஷ்யா ஜேர்மன் தூதரக அலுவலர்கள் இருவரை ஏற்றுக்கொள்ளப்படாதவர்கள் என்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் அவர்கள் இருவரும் ரஷ்யாவை விட்டு வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவுக்கான ஜேர்மன் தூதர் Geza Andreas von Geyrஐ அழைத்து, பெர்லினிலிருந்த ரஷ்ய தூதரக அலுவலர்களை வெளியேற்றியதற்காக முறைப்படி எதிர்ப்பை தெரிவித்தபின், ரஷ்யா இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

ஆனால், இந்த நடவடிக்கை நியாயமானது அல்ல என்று தெரிவித்துள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சகம், மேலும் நடவடிக்கைகள் தொடரும் என எச்சரித்துள்ளதால் இரு நாட்டு உறவிலும் விரிசல் ஏற்படும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

பெர்லின் பூங்கா ஒன்றில் வைத்து ஜார்ஜியா நாட்டைச் சேர்ந்த Zelimkhan Khangoshvili (40) என்பவர் கொல்லப்பட்டதன் பின்னணியில் ரஷ்யா இருக்கலாம் என பொலிசார் தெரிவித்ததைத் தொடர்ந்து கடந்த வாரம் ஜேர்மனி இரண்டு ரஷ்ய தூதரக அலுவலர்களை ஜேர்மனியை விட்டு வெளியேற்றியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்