விமான ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் 180,000 பயணிகள் பாதிப்பு: ஜேர்மனியில் குழப்பம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஊதியம் மற்றும் இதர பிரச்னைகளை முன்வைத்து ஜேர்மனியின் விமான நிறுவனம் ஒன்றின் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கியதையடுத்து, 180,000 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர், ஜேர்மனியில் பெரும் குழப்பம் நிலவுகிறது.

Lufthansa நிறுவனத்தின் விமான ஊழியர்கள் சங்கம் ஒன்றைச் சேர்ந்த ஊழியர்கள் நேற்று நள்ளிரவு தொடங்கிய இந்த வேலை நிறுத்தம், வெள்ளிக்கிழமை நள்ளிரவு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலை நிறுத்தத்தால் Lufthansa நிறுவனம் இன்று 700 விமானங்களையும் நாளை 600 விமானங்களையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.

ஏராளமான வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக சுமார் 180,000 பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என்று அறிவித்துள்ள Lufthansa நிறுவனம், பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள அசௌகரியங்களுக்காக வருந்துவதாக தெரிவித்துள்ளது.

Lufthansa விமான நிறுவனம், இந்த வேலை நிறுத்தத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஏறிய நிலையிலும், வேலை நிறுத்தம் நியாயமானதே என்று கூறி நீதிமன்றம் வேலை நிறுத்தத்தை தடை செய்ய மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

கடந்த மாதமே, இந்த விமான ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை வேலை நிறுத்தம் ஒன்றில் ஈடுபட்ட பின்னரும் கூட, ஊதிய உயர்வு போன்ற பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாததால் மீண்டும் வேலை நிறுத்தத்தில் இறங்கியுள்ளனர் விமான ஊழியர்கள்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்