புற்றுநோய் விழிப்புணர்வுக்காக சைக்கிளில் புறப்பட்ட இளைஞர்: ஈரானில் சந்தித்த அதிர்ச்சியும் மகிழ்ச்சியும்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

புற்றுநோய் விழிப்புணர்வுக்காக ஜேர்மனியிலிருந்து இந்தியா நோக்கி சைக்கிளில் புறப்பட்ட இளைஞர் ஒருவர் ஈரானில் கொள்ளையிடப்பட்டதோடு கடுமையாக தாக்கப்பட்டார்.

ஜேர்மனியைச் சேர்ந்த, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள Philipp Markgraf (28), புற்றுநோய் சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஜேர்மனியிலிருந்து இந்தியா நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருக்கும்போது, ஈரானில் ஒரு கூட்டம் இளைஞர்களால் கடுமையாக தாக்கப்பட்டார்.

அதில் அவரது தாடை எலும்பும், கன்ன எலும்புகளும் உடைந்ததால், சிகிச்சைக்காக தனது பயணத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ஜேர்மனிக்கு திரும்பியுள்ளார் Philipp.

அந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தைத் தொடர்ந்து, தனக்கு நேரிட்ட அசம்பாவிதத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டதோடு, தாக்கப்படுவதற்கு முன்னும் பின்னும் உள்ள தனது புகைப்படங்களையும் வெளியிட்டார்.

உடனடியாக அந்த பதிவு வைரலாகி, 77,000 லைக்குகளைப் பெற்றது. அதோடு நிற்கவில்லை, தினமும் லட்சக்கணக்கானோர் ஈரானிலிருந்து அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

’மன்னிக்க வேண்டும், நாங்கள் உங்களை நேசிக்கிறோம்’ என ஏராளமானோர் அவரது பதிவுக்கு கீழே எழுதினார்கள்.

ஒருவர் ஒரு படி மேலே போய், மீண்டும் ஈரானுக்கு வாருங்கள், ஆனால் வருவதற்கு முன் இம்முறை எனக்கு ஒரு செய்தி அனுப்புங்கள், நீங்கள் சந்தித்த மோசமான நிகழ்வை மறக்கும் அளவுக்கு நீங்கள் உங்கள் பயணத்தை என்ஜாய் செய்ய நான் உதவுகிறேன் என்று எழுதியுள்ளார்.

நடந்த சம்பவம் தனக்கு எந்த கசப்பையும் ஏற்படுத்தவில்லை என்று கூறியுள்ள Philipp, தனது பதிவு இந்த அளவுக்கு கவனம் ஈர்த்தது ஆச்சரியமாக உள்ளது என்கிறார்.

நான் விரும்பாமலேயே உள்ளூரில் ஒரு ஹீரோவாகிவிட்டேன் என்கிறார் அவர்.

ஜேர்மனியிலிருந்து இந்தியாவுக்கு சைக்கிளில் பயணம் மேற்கொள்ள முயன்று வரும் Philipp, 24 நாடுகளைச் சுற்றி 20,000 கிலோமீற்றர்கள் பயணிக்க வேண்டும்.

அவரது நோக்கம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, Dresdenஇலுள்ள குழந்தைகளுக்கான புற்றுநோய் அமைப்பு ஒன்றிற்காக பணம் சேகரிப்பதுமாகும்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...