வெனிஸ் நகரத்தில் காபி தயாரித்த ஜேர்மன் சுற்றுலாப்பயணிகளுக்கு அபராதம்!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மன் சுற்றுலாப்பயணிகள் இருவர் வெனிசிலுள்ள பிரபல சுற்றுலாத்தலம் ஒன்றில் காபி தயாரித்ததற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

பெர்லினைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப்பயணிகள், வெனிஸ் நகரின் பிரபல Rialto பாலத்தின் படிக்கட்டுகளில் காபி தயாரித்தத்தற்காக அவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, அவர்கள் நகரத்தை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

32 மற்றும் 35 வயதுடைய அந்த சுற்றுலாப்பயணிகள், உலகப் புகழ் பெற்ற அந்த இடத்தில், தங்களுடன் தூக்கிச் செல்லக்கூடிய காபி தயாரிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி காபி தயாரிப்பதைக் கண்ட அங்கிருந்த மக்கள் பொலிசாரிடம் புகாரளித்தார்கள்.

புதிதாக நிறைவேற்றப்பட்டுள்ள ஒரு சட்டத்தின்படி, பொலிசார் அவர்களுக்கு 950 யூரோக்கள் அபராதம் விதித்ததோடு, அவர்களை வெனிசை விட்டு வெளியேற உத்தரவிட்டனர். வெனிஸ் நகரம் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.

இங்கு வரும் மரியாதையில்லாத மக்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைக்கிறார்கள்.

அவர்கள் நினைத்தது நடக்காது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று கூறியுள்ள நகர மேயரான Luigi Brugnaro, தகவல் கொடுத்த உள்ளூர் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அப்படிப்பட்டவர்கள் நிறுத்தப்பட வேண்டும், அபராதத்துடன் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்றார் அவர்.

இனி இப்படி திருப்பி அனுப்பப்படுபவர்களைக் குறித்து அவர்களது நாட்டின் தூதரகங்களுக்கும் தவவல் அளிக்கப்படும் என்றார் அவர்.

மே மாதம் நிறைவேற்றப்பட்ட அந்த சட்டம், நகரை, நாகரீகமாக, சுத்தமாக மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது.

குறிப்பிட்ட இடங்களில் சுற்றுலாப்பயணிகள் முகாமிடுவது, நீரூற்றுகளில் குளிப்பது, பொது இடங்களில் சட்டை அணியாமல் திரிவது போன்ற செயல்களுக்கு தடை விதித்துள்ளதோடு, மீறுபவர்களுக்கு அபராதமும் விதிக்க வழிவகை செய்கிறது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...