தீவிரவாதத்திற்கெதிராக நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானை வலியுறுத்தும் ஜேர்மனி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை குறைக்கும் வகையில், புல்வாமா தாக்குதலில் ஈடுபட்ட அமைப்பு உட்பட தீவிரவாத குழுக்கள் மீது தெளிவான மற்றும் நிரந்தர நடவடிக்கை எடுக்குமாறு ஜேர்மனி உட்பட பல நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்து பாகிஸ்தானை வலியுறுத்தியுள்ளன.

பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஐரோப்பிய ஆணையத்தின் துணை தலைவரும், வெளியுறவு விவகாரங்களின் உயர் பிரதிநிதியுமான Federica Mogherini, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றத்தை உடனடியாக குறைப்பதற்கான அவசியத்தை வலியுறுத்தியதோடு, இந்தியாவோடும் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பிலிருப்பதையும் உறுதி செய்ததாக திங்களன்று வெளியிடப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

குரேஷி மற்றும் சுஷ்மா சுவராஜுடன் பேசிய பிரித்தானிய வெளியுறவுச் செயலரான ஜெரமி ஹண்ட், இந்தியாவோடும் பாகிஸ்தானோடும் சர்வதேச கூட்டாளிகளோடும் இணைந்து புல்வாமா தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை உறுதி செய்வதற்கான பிரித்தானியாவின் அர்ப்பணிப்பை வலியுறுத்தினார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் கொள்கையானது எப்போதுமே பாகிஸ்தானும் இந்தியாவும் பேச்சு வார்த்தை மூலமாக தங்கள் வேறுபாடுகளை தீர்த்துக் கொள்வதை உற்சாகப்படுத்துவதுதான் என்றும், பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றியம் பட்டியலிட்டுள்ள தீவிரவாத குழுக்கள் மட்டுமின்றி தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடும் தனி நபர்கள் மீதும் கூட தெளிவான மற்றும் நிரந்தரமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சரான Heiko Maasம் பதற்றமான சூழலை தணிக்குமாறு இந்தியாவையும் பாகிஸ்தானையும் கேட்டுக் கொண்டுள்ளதோடு, கூடுதலாக, எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளதாக ஜேர்மனி வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்