நிலவு எங்கே இருக்கிறது?: 2018ஆம் ஆண்டு ஜேர்மானியர்கள் கூகுளில் அதிகம் தேடிய கேள்வி!

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மானியர்கள் 2018ஆம் ஆண்டு சந்திர கிரகணம் குறித்து கூகுளில் அதிகம் தேடிய நிலையில், நிலவு எங்கே இருக்கிறது என்ற கேள்வியை அதிகம் பேர் கேட்டிருக்கிறார்கள் என்னும் வேடிக்கையான செய்தி வெளியாகியிருக்கிறது.

2018ஆம் ஆண்டு முடிவுக்கு வரவிருக்கும் நிலையில், ஜேர்மன் மக்களால் கூகுளில் அதிகம் தேடப்பட்ட விடயங்கள் குறித்த தகவலை கூகுள் வெளியிட்டுள்ளது.

2018இல் மிக அதிகம் தேடப்பட்ட தலைப்பு FIFA உலகக் கிண்ண கால்பந்து போட்டியாகும்.

அதே தலைப்பின் கீழ், எத்தனை என்ற வரிசையில், பிரான்ஸ் எத்தனை முறை உலக சாம்பியனாகியிருக்கிறது என்ற கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள் ஜேர்மானியர்கள். இரண்டாவதாக முன்னாள் தொலைக்காட்சி பிரபலமான Daniel Küblböck கவனம் ஈர்த்திருக்கிறார்.

Küblböck ஒரு பிரபல பாப் ஸ்டார். விடுமுறைக்காக கப்பல் பயணம் ஒன்றை மேற்கொண்ட Küblböck திடீரென மர்மமான முறையில் மாயமானார்.

சிலர் அவர் கப்பலிலிருந்து குதித்ததைப் பார்த்ததாக சாட்சியம் கூறினார்கள்.

செய்திகள் வரிசையில் அதிகம் தேடப்பட்ட விடயம் 21ஆம் நூற்றாண்டின் நீண்ட சந்திர கிரகணம்.

புவியின் நிழலில் மறைந்த நிலவு, சிவப்பு நிறமாக காணப்பட்டதால் இரத்த நிலவு என அழைக்கப்பட்டது பலரது கவனத்தையும் ஈர்த்திருந்த நிலையில்தான் ஜேர்மானியர்கள் அந்த கேள்வியை அதிகம் கேட்டார்கள்.

அந்த கேள்வி: நிலவு எங்கே இருக்கிறது?

அதற்கு அடுத்த விடயம் Chemnitz நகரில் 35 வயது ஜேர்மானியர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து ஆயிரக்கணக்கானவர்கள் தெருக்களில் இறங்கி பேரணிகள் நடத்தியது குறித்தது.

ஒரு சிரிய அகதியும், ஈராக் நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவரும் ஜேர்மானியர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்த விடயம் ஜேர்மனியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்தபடியாக ஜேர்மானியர்கள் கூகுளில் அதிகம் தேடிய விடயம், Hambach காட்டை அழிப்பதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பொலிசாருடன் நடத்திய மோதல்.

என்ன என்ற கேள்வி வரிசையில் இரண்டு பூச்சிகள் முக்கிய இடம் பிடித்தன.

கம்பளிப்பூச்சிகளை எப்படி ஒழிப்பது என்ற கேள்வியும் குளவிகளிடம் இருந்து தப்பிப்பது என்ற கேள்வியும் ஜேர்மானியர்களால் அதிகம் கேட்கப்பட்டன.

ஏனென்றால், கம்பளிப்பூச்சி தொல்லையால் சில பள்ளிகள், நீச்சல் குளங்கள் மற்றும் பொது குளியல் குளங்கள் ஆகியவை மூடப்பட்டதோடு, குளவித் தொல்லையால் பாதிக்கப்பட்டவர்கள் குளவியிடம் கொட்டும் வாங்கிக் கொண்டு அதைக் கொல்லவும் முடியாமல் விழித்தனர்.

காரணம், குளவி பாதுகாக்கப்பட்ட உயிரினம் ஆகையால் அதற்கு ஆபத்தை ஏற்படுத்தினால் 5,000 முதல் 50,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்பதால்தான்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers