ஐந்து வயது சிறுமிக்கு தண்ணீர் கூட கொடுக்காமல் கொன்ற இளம் பெண்! விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்

Report Print Santhan in ஜேர்மனி

ஜேர்மனியில் குடிக்க தண்ணீர் கூட கொடுக்காமல் 5 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் ஐ.எஸ் இயக்கத்தை சேர்ந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜேர்மனியைச் சேர்ந்தவர் ஜெனிபர்(27). தண்ணீர் கூட கொடுக்காமல் இவரும், இவருடைய கணவரும் 5 வயது சிறுமியை துன்புறுத்தியதால் சிறுமி பரிதாபமாக இறந்தாள்.

இந்நிலையில் ஜெனிபர் ஐ.எஸ் இயக்கத்தைச் சேர்ந்தவர் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில், கடந்த 2014-ஆம் ஆண்டு இராக்கிற்கு சென்ற ஜெனிபர் தன்னை ஐ.எஸ் இயக்கத்தில் சேர்த்து கொண்டுள்ளார்.

ஐ.எஸ் அமைப்பின் கட்டுப்பாட்டு பகுதியிலுள்ள பெண்கள் அந்த இயக்கத்தால் அமல்படுத்தப்பட்டிருந்த விதிமுறைகளை கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணிக்கும் பொறுப்பு ஜெனிபருக்கு வழங்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

கடந்த 2014-ஆம் ஆண்டு இராக்கின் வடக்குப்பகுதி முழுவதும் தங்கள் ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்த ஐ.எஸ் இயக்கத்தினர், அச்சமயத்தில் யாசிடி எனும் சமூகத்தைச் சேர்ந்த மக்களை அடிமைபடுத்தினர்.

இந்நிலையில் தான் 2015-ஆம் ஆண்டு அந்த சமூகத்தைச் சேர்ந்த 5 வயது சிறுமியை ஜெனிபர் தன்னுடைய வீட்டிற்கு கொத்தடிமையாக அழைத்து வந்துள்ளார்.

அப்போது சிறுமிக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால், அவர் மெத்தையில் படுத்திருந்த போது சிறுநீர் கழித்துள்ளார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த ஜெனிபரின் கணவர், சிறுமியை வீட்டிற்கு வெளியே சங்கிலியால் கட்டி வைத்துள்ளார்.

சங்கிலியால் கட்டிய நிலையில், அந்த சிறுமிக்கு தண்ணீர் கொடுக்காமல் துன்புறுத்தி வந்துள்ளனர். இதனால் தாகத்தால் தவித்த அந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு முனிச் நகரிலுள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதால், குற்றம் மட்டும் நிரூபிக்கப்பட்டால், ஜெனிபருக்கு அதிகபட்ச தண்டனையாக ஆயுள் தண்டனை கொடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், சிறுமி உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை அறிந்த ஜெனிபர், சிறுமியை காப்பாற்றுவதற்கு எந்த ஒரு முயற்சியும் எடுக்கவில்லை.

அதைத் தொடர்ந்து சிறுமி உயிரிழந்த சில மாதங்களுக்கு பிறகு, தன்னுடைய ஆவணங்களை புதுப்பிப்பதற்காக துருக்கியின் தலைநகர் அன்காராவிலுள்ள ஜேர்மானிய தூதரகத்திற்கு வந்த ஜெனிபரை துருக்கி காவல்துறை கைதுசெய்தது.

கைதுசெய்யப்பட்ட பின்னர் நாடு கடத்தப்பட்ட ஜெனிபர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிப்பதற்குரிய போதிய ஆவணங்கள் இல்லாததால் அவர் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்டார்.

அதன் பின் கடந்த ஜூன் மாதம் சிரியாவுக்கு செல்வதற்கு முயற்சி செய்த ஜெனிபரை கைது செய்த பொலிசார், அவரை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஜெனிபர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கு விசாரணையின் திகதி இன்னும் முடிவுசெய்யப்படவில்லை.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்