ஜேர்மனியில் இவர்களின் மூலம் கிரிக்கெட் வளர்ச்சியை அதிகரிக்க முடியும்: ஐசிசி உயர் அதிகாரி

Report Print Kabilan in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் கிரிக்கெட்டை வளர்ச்சியடையச் செய்ய, தெற்காசியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் பெரிதும் உதவுவார்கள் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மேலாளர் தெரிவித்துள்ளார்.

104 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.சி.சி-யில் 12 நாடுகள் மட்டுமே டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் நாடுகளாக உள்ளன. இதனால் கிரிக்கெட்டை உலக அளவில் விரிவடைய செய்வது குறித்து ஐ.சி.சி-யின் மீது விமர்சனம் எழுந்தது.

அதனைத் தொடர்ந்து, ஜேர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதன் மூலம், ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் இந்த விளையாட்டை விரிவடையச் செய்ய முடியும் என ஐ.சி.சி முடிவெடுத்துள்ளது.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உருவான கிரிக்கெட் மீதான ஈர்ப்பினால் பொருளாதார ரீதியான வளர்ச்சியும் அதிகரித்தது. எனவே, ஜேர்மனியில் அதிகளவில் அகதிகளாக இடம்பெயரும் ஆப்கானிஸ்தானியர்கள் மூலமாக கிரிக்கெட் வளர்ச்சியை அதிகரிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, ஜேர்மனியில் சுமார் 46,292 ஆப்கானைச் சேர்ந்த அகதிகள் இருப்பதாக பதிவு செய்யப்பட்டிருந்தது. எனவே இவர்களின் மூலமாக ஜேர்மனியில் கிரிக்கெட்டை வளர்ச்சியடைய செய்ய உள்ளதாக ஐ.சி.சி-யின் பொது மேலாளர் கேம்பெல் ஜேமிசன் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘கிரிக்கெட் விரிவடைந்து வருகிறது. அதற்கு நல்ல உதாரணம், ஜேர்மனியில் கடந்த 5 ஆண்டுகளில் 50 கிரிக்கெட் அணிகளில் இருந்து தற்போது 500 அணிகள் வரை சென்றுள்ளோம்.

இந்த நாட்டில் உள்ள உள்கட்டுமானம் மற்றும் விளையாட்டிற்கான ஆளுமை ஆகியவற்றைக் கையாள நாம் போராடுகிறோம். அந்நாட்டில் கிரிக்கெட் வீரர்கள் எப்போதும் அவர்கள் விரும்பும் விளையாட்டை விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும்.

கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள், ஜேர்மனியில் இந்த விளையாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுவார்கள். மேலும் உள்ளூர் வீரர்களுடன் புலம்பெயர்ந்தவர்களும் சேர்ந்து விளையாடினால் வளர்ச்சி இன்னும் அதிகரிக்கும்.

இந்த விடயத்தில், தெற்காசியாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்களின் மூலம் நாம் நல்ல வளர்ச்சியை அடையலாம்’ என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போது கிரிக்கெட்டின் வளர்ச்சி கணிசமாக உயர்ந்து வருகிறது. அதிலும் அங்கு வாழும் இந்தியர்களின் பங்களிப்பு மிக அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்