ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு: ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கும் பொருந்தும் என அறிவிப்பு

Report Print Arbin Arbin in ஜேர்மனி

சவுதி அரேபிய பத்திரிகையாளர் படுகொலை தொடர்பில் சந்தேகிக்கப்படும் 18 பேரையும் ஜேர்மனிக்குள் நுழைய தடை விதிப்பதாக வெளிவிவகார அமைச்சர் Heiko Maas அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

திங்களன்று ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் சந்திப்பின்போது Heiko Maas இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மட்டுமின்றி இந்த தடையானது மொத்தமுள்ள 26 ஐரோப்பிய நாடுகளுக்கும் பொருந்தும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

பத்திரிகையாளர் கஷோகியின் கொலைகாரர்கள் என சந்தேகிக்கப்படும் அந்த 18 பேர் தொடர்பில் முக்கிய தகவல்களை வெளியிட மறுத்துள்ள அமைச்சர் மாஸ், Schengen பகுதியில் இருந்து அவர்கள் 18 பேரும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதவாறு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

துருக்கி நாட்டு தூதரகத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை மயக்க மருந்து கொடுத்து வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு சவுதி பட்டத்து இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ. நேற்று குற்றம்சாட்டியிருந்தது.

சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் என்பதால் நாட்டின் அனைத்து விவகாரங்களிலும் முக்கிய முடிவெடுக்கும் முஹம்மது பின் சல்மானின் உத்தரவு இல்லாமலும்,

கவனத்துக்கு வராமலும் இதுபோன்ற எந்த காரியமும் நடக்க முடியாது என சி.ஐ.ஏ. உயரதிகாரி ஒருவரும் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையிலேயே ஜேர்மன் அரசு குறித்த கொலைகாரர்கள் 18 பேருக்கும் தடை விதித்து நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்