ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறும் நேரம் நெருங்கி வருவதையடுத்து ஜேர்மனி தங்கள் நாட்டில் வாழும் பிரித்தானியர்களுக்காக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு கட்டமாக பிரெக்சிட்டுக்குப் பின்னான காலகட்டத்தில் ஜேர்மனியில் வாழும் பிரித்தானியர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற்ற பின்னரும்கூட தங்கள் பிரித்தானியக் குடியுரிமைகளை தொடர்ந்து வைத்துக் கொள்ள அனுமதிக்கும் சட்டம் குறித்த மசோதா ஒன்றை பெர்லின் உருவாக்கி வருகிறது.
ஆனால் பிற ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத குடிமக்களுக்கு இது பொருந்தாது, அவர்கள் தங்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை ஜேர்மனி அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல் ஜேர்மனி இன்னொரு முக்கிய நடவடிக்கையும் எடுக்கவுள்ளது, அதாவது ஐரோப்பிய ஒன்றிய சுதந்திரத்தின் கீழ் பிரித்தானிய விதிகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சிறு தொழில்களை பிரெக்சிட்டுக்குப் பின் ஜேர்மன் நிறுவனங்களாக மாற்ற அது திட்டமிட்டு வருகிறது.
ஜேர்மன் சட்டத்தின் கீழ் தொழில்களை பதிவு செய்வதற்கு அதிக முதலீடு தேவை என்பதால் பிரித்தானிய நிறுவனங்களாக தங்களை பதிவு செய்ய முடிவெடுத்த சுமார் 10,000 நிறுவனங்களை இந்த மாற்றம் பாதிக்கும்.
தற்போதைய சட்டங்களின்படி தங்களை ஜேர்மன் நிறுவனங்களாக பதிவு செய்ய விரும்பும் நிறுவனங்கள் 25,000 யூரோக்களை முதலீடு செய்திருக்க வேண்டும், இதனால் முன்பு குறைந்த முதலீடு செய்தவர்கள் தங்கள் முதலீட்டை 25,000 யூரோக்களாக அதிகரிக்க வேண்டியிருக்கும்.
ஆனால் வரவிருக்கும் புதிய சட்டங்கள் இனி ஜேர்மன் நிறுவனங்களாக மாறும் நிறுவனங்கள் மேலும் முதலீடு செய்யத் தேவையில்லை, அதாவது தங்கள் முதலீட்டை அதிகரிக்க வேண்டியதில்லை என்று கூறுகின்றன.
பிரெக்சிட் பல சிறு தொழில் நிறுவனங்களுக்கு பெரும் சவாலை முன்வைத்துள்ளது, நாங்கள் அவர்களுக்கு உதவ விரும்புகிறோம் என்கிறார் ஜேர்மன் நீதித்துறை அமைச்சர் Katarina Barley.
புதிய சட்டங்களின்படி ஜேர்மன் சிவில் பணியாளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருக்க வேண்டும், ஆனால் பிரெக்சிட்டுக்குப் பின்னும், இது பிரித்தானியாவிலிருந்து வந்திருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்றும் புதிய சட்டம் தெரிவிக்கிறது.