ஜேர்மனி ஐரோப்பாவின் பாலியல் விடுதி: கடுமையாக விமர்சிக்கும் சர்வதேச அமைப்பு

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஒரு பக்கம் உலகம் முழுவதும் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு விட்டது என்று கூறப்பட்டாலும், உண்மையில் இன்றுவரை அந்த பழக்கம் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஜேர்மனியைப் பொருத்தவரையில் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்படுவதும் வேலையாட்களை ஏமாற்றி பயன்படுத்திக் கொள்ளுவதும், அடிமைத்தனத்திற்கு வழி வகுப்பது என்ன, அதை நிறுத்துவது எப்படி, என்று ஒரு விவாதமே செய்யலாம் போலிருக்கிறது.

40 மில்லியனுக்கும் அதிகமானோர் உலகம் முழுவதிலும் ‘நாகரீக அடிமைத்தனத்தில்’ சிக்கித் தவிக்கும் நிலையில், அதில் 167,000பேர் ஜேர்மனியில்தான் இருப்பதாக அதிர்ச்சி செய்தி வெளியிட்டுள்ளது அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Walk Free Foundation என்னும் அமைப்பு.

‘நாகரீக அடிமைத்தனம்’ என்பதை, ஒருவர் இன்னொருவருடைய சுதந்திரத்தை, தனது உடலை கட்டுப்படுத்தும் சுதந்திரத்தை, ஒரு வேலையை ஏற்கும் அல்லது மறுக்கும் சுதந்திரத்தை, அல்லது வேலை செய்வதை நிறுத்தும் சுதந்திரத்தை, தங்களது லாபத்திற்காக பறித்துக் கொள்வது என விவரிக்கலாம்.

பயமுறுத்தியும், வன்முறையின் மூலமாகவும், வற்புறுத்தி தூண்டுவதன் மூலமும், துஷ்பிரயோகம் செய்வதன் மூலமும், அதிகாரத்தின் மூலமும் ஏமாற்றியும் கூட சுதந்திரம் பறிக்கப்படலாம்.

மனிதக் கடத்தலையும், கடன் பெற்றவரிடம் அடிமை போல வாழ்வதையும் கட்டாயத் திருமணங்களையும் கூட அடிமைத்தனம் என்று கூறலாம்.

ஜேர்மனியில் நாகரீக அடிமைத்தனம் புலம் பெயர்ந்தோரை மையமாகக் கொண்டு செயல் பட்டாலும் உள்ளூர் பணியாளர்களும் அதற்குத் தப்பவில்லை.

ஒரு படி மேலே போய், பாலியல் துஷ்பிரயோகம் அல்லது பாலியல் ரீதியாக மனிதர்களை ஏமாற்றி அதனால் மற்றவர்கள் பெருமளவில் லாபம் அடைவது மிக அதிக அளவில் காணப்படுகிறது.

ஜேர்மனிதான் ஐரோப்பாவின் விபச்சார விடுதி என்று அழைக்கப்படும் அளவில் பெண்களை துஷ்பிரயோகித்தல் அங்கு தலை விரித்தாடுகிறது என்கிறார் உலகம் முழுவதும் மனிதக் கடத்தலுக்கு எதிராக போராடும் சர்வதேச நீதி அமைப்பு (IJM) என்னும் அமைப்பின் தலைவரான Dietmar Roller.

ஃபெடரல் கிரிமினல் பொலிஸ் அலுவலகத்தின் புள்ளி விவரத்தின்படி, ஜேர்மனியில் 2017 ஆம் ஆண்டில் மட்டும் கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்பட்டவர்கள் 327 பேர், பாதிக்கப்பட்டதாக ஆவணங்களில் பதிவானவர்கள் 500 பேர்.

அழகான வாலிபர்களை பயன்படுத்தி இளம்பெண்களை ஏமாற்றி காதலிக்க வைத்து, பின் அவர்களுக்கு பணக் கஷ்டம் என்பது போல் ஒரு தோற்றத்தை உருவாக்கி, அதற்கு உதவுவதற்காக பெண்களை வேறு வழியில்லாமல் பாலியல் தொழிலுக்கு அனுப்புவது போல ஏமாற்றுவது ஜேர்மனியில் பெண்களை ஏமாற்ற பயன்படுத்தும் ஒரு முறையாகும்.

இன்றைய இண்டர்நெட் உலகில் ஜேர்மானியர்கள் ஆன்லைனில் ஒரு குழந்தையை வாடகைக்கு எடுத்து அதை எப்படியெல்லாம் துஷ்பிரயோகம் செய்யமுடியுமோ அவ்வளவும் செய்யலாம், அதுவும் கெமரா முன்னாலேயே செய்யலாம் என்று கூறுகிறார் Dietmar Roller.

குழந்தைகள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூறும் Dietmar Roller, சமீபத்தில் தனது மகனை பாலியல் தொழிலுக்காக இண்டர்நெட்டில் வாடகைக்கு விட்ட பெண் மற்றும் அவளது ஆண் நண்பர் கைது செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு கூறுகிறார்.

நாகரீக அடிமைத்தனத்துக்கு எதிராக போராடுவது மிகக் கடினம் என்று கூறும் Dietmar Roller, அதை ஒழிப்பதற்கு மிக நீண்ட காலம் ஆகும், ஜேர்மனிக்கும் இது பொருந்தும் என்கிறார்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers