ஜேர்மனியை மீண்டும் வம்புக்கிழுக்கும் டிரம்ப்: அலட்சியப்படுத்தும் ஜேர்மனி

Report Print Balamanuvelan in ஜேர்மனி

ஜேர்மனி குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிடும் ட்வீட்களைப் பார்க்கும்போது, ஜேர்மனியை வம்புக்கிழுப்பதை ஒரு பொழுதுபோக்காகவே ஆக்கி விட்டாரோ என எண்ணத் தோன்றுகிறது.

இரண்டு நாட்களுக்குமுன் “ஏற்கனவே வலிமையற்றிருக்கும் பெர்லின் கூட்டணியை அகதிகள் பிரச்சினை ஆட்டங்காண வைத்திருக்கும் சூழலில், ஜேர்மன் மக்களே அதன் தலைமைக்கெதிராக திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜேர்மனியில் குற்றம் அதிகரித்து வருகிறது. தங்கள் கலாச்சாரத்தை வலிமையாகவும் முரட்டுத்தனமாகவும் மாற்றிக் கொண்ட லட்சக்கணக்கான மக்களை அனுமதித்ததன்மூலம் ஐரோப்பா பெருந்தவற்றைச் செய்துள்ளது” என்று ஒரு ட்வீட்டை வெளியிட்டிருந்தார் டிரம்ப்.

நேற்று அவர் மீண்டும் ”2015 தொடங்கி ஒரு மில்லியனுக்கும் அதிகமான அகதிகளை ஜேர்மனி நாட்டிற்குள் அனுமதித்ததிலிருந்து குற்றச்சம்பவங்கள் 10 சதவிகிதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளன” என ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால், கடந்த 30 ஆண்டுகளில் பார்க்கும்போது ஜேர்மனியில் மொத்தமாக குற்றத்தின் அளவு சுமார் 10 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.

ஜேர்மன் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலைப் பொருத்தவரை, கடந்த வார இறுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று அவர்தான் ஜேர்மனியின் மிகப் பிரபலமான அரசியல்வாதி என 50 சதவிகிதம் ஜேர்மானியர்கள் வாக்களித்துள்ளதாகத் தெரிவிக்கிறது.

ஏஞ்சலா மெர்க்கல் டிரம்பின் கருத்தை காதிலேயே வாங்கவில்லை போல் தெரிகிறது. பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடன் இணைந்து பங்கேற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய அவர் ”குற்றப் புள்ளிவிவரங்களைப் பார்த்தாலே உண்மை நிலவரம் புரியும்” என்றார்.

இந்த புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது குற்றத்தின் அளவு எவ்வளவு குறைந்திருக்கிறது என்று புரிகிறது, அதை இன்னும் குறைக்க நாங்கள் தொடர்ந்து முயற்சி செய்வோம் என்றார் அவர்.

இதர அரசியல்வாதிகளும் தங்கள் ட்வீட்கள் மூலம் டிரம்புக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers