அகதி அந்தஸ்து பெற பணம்: ஜேர்மனியை உலுக்கிய பெரும் ஊழல் புகார்

Report Print Arbin Arbin in ஜேர்மனி

ஜேர்மனியில் அகதி அந்தஸ்து பெற பணம் அளித்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என உள்விவகார மந்திரி Horst Seehofer உறுதியளித்துள்ளார்.

புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்படும் அனைத்து நடவடிக்கைகளிலும் நம்பகத்தன்மையை மேம்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனியின் ப்ரெமன் மாகாணத்தில் அமைந்துள்ள குடிவரவு மற்றும் அகதிகள் தொடர்பான அலுவலகம் ஒன்று கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு காலகட்டம் வரை சுமார் ஆயிரம் எண்ணிக்கையிலான தவறான நபர்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பான விசாரணையில் அந்த அலுவலகத்தில் உள்ள ஊழியர்கள் பலர் பணம் பெற்றுக் கொண்டு, தவறான பலருக்கும் அனுமதி வழங்கியதாக தெரிய வந்துள்ளது.

இதில் தலா 1000 யூரோ வரை லஞ்சமாக பெற்றுள்ளதும் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்த விவகாரம் அதிகாரிகளால் உறுதிப்படுத்த முடியவில்லை.

ப்ரெமன் மாகாணத்தில் இருந்து மட்டும் ஈராக் மற்றும் ஆப்கான் அகதிகள் அதிக அளவில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே இந்த சந்தேகம் உயர் அதிகாரிகளுக்கு எழுந்துள்ளது.

2017 ஆம் ஆண்டின் முதல் 6 மாதத்தில் மட்டும் ஈராக்கில் இருந்து புகலிடம் கோரிய 96.4 விழுக்காடு மக்களுக்கு அகதிகள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

இது பெர்லின் மாகாணத்தை விடவும் இரு மடங்கு அதிகமாகும். மேலும் ஆப்கான் புகலிட கோரிக்கையாளர்கள் 65 விழுக்காடினரும் அகதிகள் அந்தஸ்து பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விவகாரம் தொடர்பில் ஜேர்மனி உள்விவகாரத்துறை அமைச்சு சுமார் 8,500 மனுக்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது.

தொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்று வருவதாகவும், விசாரணைக்கு முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆனால் அது எந்த வகையான நடவடிக்கை என உள்விவகார அமைச்சு தெரிவிக்க மறுப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்