சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளராக இருந்து நாடு திரும்ப உள்ள ஒரு குடும்பத்தால் ஜேர்மனிக்கு பாரிய ஆபத்து நேரலாம் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐ.எஸ் அமைப்பின் பிடியில் இருந்த சிறுவர்கள் உள்ளிட்ட பெண்களுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளதாகவும், இது அவர்களை சமூக விரோத செயல்களை செய்யத் தூண்டும் எனவும் ஜேர்மனி உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெயர் வெளியிடப்படாத அந்த குடும்பம் தொடர்பில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாகவும், சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரால் ஏற்படும் ஆபத்தை கணிக்க முடியாது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஜேர்மனி விட்டு வெளியேறிய பின்னர் குறித்த பெண்மணி ஐ.எஸ் கோட்பாடுகளில் உறுதியாக இருந்துள்ளதாகவும், பல்வேறு காணொளிகளில் அவர் முகம் காட்டியுள்ளதாகவும் உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சிரியாவில் இருந்து நாடு திரும்பும் அனைவர் மீதும் கண்காணிப்பு அவசியம் என்ற போதிலும் நாட்டு நலன் கருதி குறித்த பெண்மணி மீது அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்றார்.
ஐ.எஸ் ஆதரவாக சிரியா மற்றும் ஈராக்கில் இதுவரை போரிட்ட 1,000-கும் மேற்பட்ட ஜேர்மானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஐரோப்பா முழுமையும் இந்த எண்ணிக்கை 10,000 முதல் 15,000 வரை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
தற்போது அமெரிக்கா மற்றும் ரஷ்ய கூட்டுப்படைகளின் ஆதிக்கத்தால் ஐ.எஸ் படைகள் வீழ்ந்ததை அடுத்தே எஞ்சிய ஐரோப்பிய பயங்கரவாதிகள் தங்கள் சொந்த நாடுகளுக்கு திரும்புகின்றனர்.