தவறான சிகிச்சை பெற்ற பெண்கள்: ரூ.1000 கோடி இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

Report Print Peterson Peterson in ஜேர்மனி

ஜேர்மனி நாட்டில் தவறான செயற்கை மார்பக சிகிச்சை பெற்ற பெண்களுக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.

நவீன காலத்தில் செயற்கை மார்பகங்களையும், மார்பக மாற்று அறுவை சிகிச்சைகளையும் மேற்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஜேர்மனி நாட்டில் இதுபோன்ற சிகிச்சைகளில் தவறு நிகழ்ந்த காரணத்தினால் தற்போது ஆயிரக்கணக்கான பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த Poly Implant Prothese (PIP) என்ற நிறுவனம் தான் செயற்கை மார்பகங்களை உருவாக்கும் சிலிகான் பைகளை தயாரித்து வழங்கி வந்துள்ளது.

இந்த நிறுவனத்திற்கு ஜேர்மனி நாட்டின் பாதுகாப்பு துறையான TUV அதிகாரப்பூர்வமாக அனுமதி வழங்கியுள்ளது.

ஆனால், PIP நிறுவனம் தயாரித்து வழங்கிய சிலிகான் பைகள் அனைத்தும் தரம் இல்லாத, ஆபத்தை ஏற்படுத்தும் விதமாக பெண்களுக்கு பொறுத்தப்பட்டது கடந்த 2010-ம் ஆண்டு வெளிச்சத்திற்கு வந்தது.

இதுமட்டுமல்லாமல், உலகம் முழுவதும் 65 நாடுகளில் சுமார் 3 லட்சம் பெண்கள் இதுபோன்ற தவறான செயற்கை மார்பக சிகிச்சை செய்துக்கொண்டது கண்டுபிடிக்கப்பட்டது.

சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை கிளப்பிய இவ்விவகாரத்தை தொடர்ந்து 1,700 பெண்களுக்கு தவறான சிகிச்சை அளித்தது உண்மை என 2013-ம் ஆண்டு நிரூபிக்கப்பட்டது.

இதுமட்டுமில்லாமல், இதுபோன்ற சிகிச்சைகளை பெற்ற பெண்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் அதிகமாக புகார்கள் பதிவானது.

இதனை தொடர்ந்து PIP நிறுவனத்தின் தலைவரான Jean-Claude Mas என்பவருக்கு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

மேலும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்துள்ளது.

இந்நிலையில், இவ்வழக்கு தொடர்பான இறுதி விசாரணை சில தினங்களுக்கு முன்னர் நீதிமன்றத்திற்கு வந்தபோது பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 60 மில்லியன் யூரோ(960,78,49,944 இலங்கை ரூபாய்) வழங்க வேண்டும்.

அதாவது, பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணிற்கும் தலா 3,000 யூரோ இழப்பீடாக வழங்க வேண்டும் என நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

எனினும், பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்பட்சத்தில் இழப்பீட்டு தொகை 1,000 கோடியை எட்டும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிகிச்சைக்கான சிலிகான் பைகள் தரமானதா என்பதை சோதிக்க தவறிய TUV பாதுகாப்பு துறை இந்த இழப்பீட்டை அளிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பினை ஏற்றுக்கொள்ளாத TUV பாதுகாப்பு துறை இத்தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments