பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கான வாழிட அட்டை (Residency card) இணையதளம் நேற்று முதல் திறக்கப்பட்டுள்ளது.
2020 டிசம்பர் 31 நிலவரப்படி பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள், அவர்கள் 2020 டிசம்பரில்தான் பிரான்சில் வாழத் துவங்கினாலும் கூட, சட்டப்பூர்வமாக பிரான்சில் வாழவேண்டுமானால், அனைவரும் புதிய வாழிட அட்டைக்கு விண்ணப்பிக்கவேண்டும்.
அந்த விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்படவேண்டிய கடைசி நாள், 2021 ஜூன் 20 ஆகும். இந்த ஆண்டு துவக்கத்தில் பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே கையெழுத்தான விலகல் ஒப்பந்தத்தின்படி (Withdrawal Agreement treaty), ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களாக இருக்கும்போது பிரித்தானியரக்ள் அனுபவித்த அதே சலுகைகளில் பெரும்பாலானவற்றை, பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியபின்னரும் தொடர்ந்து பெற, இந்த அட்டை அவசியமாகும்.
இந்த வாழிட அட்டையில் இரண்டு வகை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பிரான்சில் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை சமர்ப்பிப்பவர்களுக்கு, தொடர்ந்து முழு உரிமைகளும் வழங்கும் அட்டை, மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக பிரான்சில் வாழ்ந்தவர்களுக்கு, தற்காலிக அட்டை.
தற்காலிக அட்டை பெற்றவர்கள், ஐந்து ஆண்டுகள் பிரான்சில் நிறைவு செய்தபின், அவர்களும் முழு உரிமை வழங்கும் அட்டையைப் பெற விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.