கொரோனா தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கொரோனா தொடர்பாக நாட்டு மக்களுக்கு சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

70 வயதுக்கு மேற்பட்டவர்கள், நீண்ட கால உடல் நல பாதிப்பு உள்ளவர்கள் மற்றும் சுவாசக்கோளாறுகள் கொண்டவர்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லாமல் இருக்குமாறும், முடிந்தவரையில் மற்றவர்களை தொடர்பு கொள்வதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

முதியவர்களை யாரும் தற்போதைக்கு சென்று சந்திக்கவேண்டாம். அதற்கு பதிலாக அவர்களை தொலைபேசியில் அழைத்து பேசவோ கடிதம் எழுதவோ செய்யலாம்.

பணி செய்வோர் முடிந்தவரை வீடுகளில் இருந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மருத்துவர்கள் தயார் நிலையில் இருக்க வசதியாக, அவசரம் இல்லாத அறுவை சிகிச்சைகளை தள்ளிவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது போக்குவரத்துகள் தொடரும்.

வரும் திங்கட்கிழமையிலிருந்து, குழந்தைகளை பகல் நேரத்தில் கவனித்துக்கொள்ளும் மையங்கள், பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு காலவரையறையற்ற விடுமுறை அளிக்கப்படுகிறது.

சுற்றுலா மற்றும் கூட்டங்களை குறைத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

எங்கெல்லாம் சாத்தியமோ, அங்கெல்லாம் மக்கள் மற்றவர்களிடமிருந்து ஒரு மீற்றர் தூரம் தள்ளி நிற்கவும், ஒழுங்காக கைகளை சோப்பு அல்லது கிருமிநாசினிகள் கொண்டு சுத்தம் செய்யவும், கைகுலுக்குதல் கட்டித்தழுவுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவும், இருமும்போது, முழங்கைக்கு மேல் பகுதியால் வாயை மறைத்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.

பிரான்சில் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளவர்களின் எண்ணிக்கை 2,876 ஆகிவிட்டதோடு, உயிரிழந்தோர் எண்ணிக்கை 61ஐ தொட்டுவிட்டதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்