தாயின் சடலத்தை பிரித்தானியாவுக்கு கடத்த முயன்ற மகன் பிரான்சில் கைது: கொலையா?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

தாயின் சடலத்தை பிரித்தானியாவுக்குள் படகு மூலம் கடத்த முயன்ற ஒருவர் பிரான்சில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கலாயிஸ் துறைமுகத்தில் கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட பொலிசார் அதில் உடல் முழுவதும் காயங்களுடன் ஒரு பெண்ணின் சடலம் ஓட்டுநர் இருக்கைக்கு பக்கத்தில் இருப்பதைக் கண்டனர்.

அது தனது தாய் என்று கூறிய அந்த காரை ஓட்டி வந்த நபர், அவருக்கு உடல் நலமில்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் அந்த 86 வயது பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து பல மணி நேரம் ஆகிவிட்டதைக் கண்டறிந்துள்ளனர்.

உடனடியாக அந்த பெண்ணின் மகனான அந்த 53 வயது நபர் கைது செய்யப்பட்டார். விசாரணையின்போது, தானும் தன் தாயும் காரில் பயணித்து வந்ததாகவும், தான் கூப்பிட்ட போது தன் தாய் பதில் கூறாததால், அவர் தூங்கிவிட்டார் என்று தான் நினைத்ததாகவும் தெரிவித்தார் அந்த பெண்ணின் மகன்.

அந்த குடும்பத்தினருக்கு பிரான்சில் மூன்று விடுமுறை இல்லங்கள் உள்ளன. அந்த வீடுகளை பரிசோதித்தபோது, அவற்றில் இரண்டில் இரத்தம் காணப்பட்டுள்ளது.

அந்த வீடுகளில் ஒன்றின் அருகில் வசிக்கும் ஒருவர், தான் அந்த தாயும் மகனும் அந்த வீட்டுக்குள் செல்வதைக் கண்டதாகவும், இருவருக்கும் சண்டை ஏற்பட்டதைக் கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உடற்கூறு ஆய்வில் அந்த பெண் மிகவும் சுகவீனமாக இருந்தது தெரியவந்துள்ளதேயொழிய, வழக்குக்கு உதவியாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. அந்த மகனும் சரியான பதில் எதுவும் கூறாமல் முன்னுக்குப்பின் முரணாகவே பேசிக்கொண்டிருக்கிறார்.

எனவே அவரை கைது செய்த பொலிசார், அவரை சிறையில் அடைக்காமல், மன நல மருத்துவமனை ஒன்றில் அனுமதித்துள்ளனர். விசாரணை தொடர்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்