பிரான்சில் ஒருவரையொருவர் போட்டுக் கொடுத்த பொலிசார்: 7 பொலிசாரின் துப்பாக்கிகள் பறிமுதல்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சில் பொலிஸ் தலைமையக ஊழியர் ஒருவர் சக ஊழியர்களைக் கொலை செய்த சம்பவம் ஒரு வித மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

கடந்து ஏழு ஆண்டுகளில் நிகழ்ந்ததை விட, கடந்த மூன்று வாரங்களில் அதிக அளவில் பொலிஸ் அதிகாரிகள் ஒருவர் மீது ஒருவர் புகார் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றம் முன்பு, விசாரணை ஒன்றில் பொலிஸ் துறை தலைவர் Didier Lallement இந்த தகவலை தெரிவித்தார்.

இதுவரை 33 புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதாக Lallement தெரிவித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக 7 பொலிசாரின் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும் இரு அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய Lallement உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Mickaël Harpon (45) என்னும் அந்த தகவல் தொழில் நுட்ப நிபுணர், ஏற்கனவே தீவிரவாத கருத்துக்களுக்கு ஆதரவளித்தவர் என்பது தெரிந்திருந்தும் சக ஊழியர்கள் அது குறித்து புகாரளிக்கவில்லை.

அவரை சரியாக கண்காணித்திருந்தால் அந்த சம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்பதால், பொலிஸ் துறை கடும் விமர்சனங்களுக்குள்ளானது. அதைத் தொடர்ந்து பொலிசார் சக ஊழியர்கள் மீது புகார்களை தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.

யாருக்காவது தீவிரவாத எண்ணங்கள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக மேலதிகாரிகளிடம் புகார் கொடுக்கத் தொடங்கியுள்ளனர் பொலிஸ் துறையில் பணியாற்றுவோர்.

இதன் தொடர்ச்சியாக கொடுக்கப்பட்ட புகார்களின் அடிப்படையில்தான், தற்போது 7 பொலிசாரின் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, ஒருவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்