பிரான்சில் மூன்று வாரங்களாக இருளில் வாழும் ஒரு குடும்பம்: காரணம் இதுதான்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரெஞ்சு கிராமம் ஒன்றில் நவீன மின் மீட்டரை பொருத்த சம்மதிக்காத ஒரு பெண்ணும் அவரது மகளும் மூன்று வாரங்களாக இருளில் வாழ்ந்து வருகிறார்கள்.

Aureille என்னும் கிராமத்தில் வசிக்கும் Marie-Hélène Teissier என்னும் ஒரு பெண்ணின் வீட்டில், மின்சார அளவைக் காட்டும் மின் மீற்றர் கருவி ஒன்று பழுதானது.

அதை பழுது பார்க்க வந்த மின்சாரத்துறை ஊழியர் ஒருவர், ஏற்கனவே இருந்த பழைய மாதிரி மீற்றருக்கு பதிலாக நவீன மீற்றர் ஒன்றை பொருத்த முயன்றுள்ளார். அந்த மீற்றர் ஒரு சர்ச்சைக்குரிய மீற்றர் என்பதால் அதை பொருத்த Marie மறுப்பு தெரிவித்துள்ளார்.

அதனால் மீற்றர் பொருத்தாமலேயே சென்றுவிட்டிருக்கிறார்கள் மின்துறை ஊழியர்கள். அதனால் சுமார் மூன்று வாரங்களாக மெழுகுவர்த்தி ஒன்றின் ஒளியில் இரவு நேரங்களைக் கழிக்கிறார்கள் Marieயும் அவரது ஐந்து வயது மகளும்.

தண்ணீர் சூடாக்க, விறகு அடுப்பை பயன்படுத்தும் Marie, வீட்டில் குளிர் சாதனப்பெட்டியை பயன்படுத்த இயலாததால் அன்றாடம் உணவுக்கான பொருட்களை வாங்கிக் கொள்கிறார்.

புதுவகை தானியங்கி மீற்றரால் உடல் நலம் பாதிப்பதாகவும், அது தனிப்பட்ட தரவுகளை சேகரிப்பதாகவும் பல இடங்களில் சர்ச்சை ஏற்பட்டதையடுத்து பிரான்சில் சுமார் 800 கிராமங்களை சேர்ந்த மக்கள், அந்த மீற்றரை பொருத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், நீதிமன்றம் ஒன்று இந்த புதுவகை மின் மீற்றர்களை பொருத்த கிராமங்கள் மறுப்பு தெரிவிக்கலாம் என தீர்ப்பளித்தது.

ஆனாலும் பிரான்ஸ், கனடா மற்றும் அமெரிக்காவில் பல இடங்களில் பொருத்தப்பட்டுள்ள இவ்வகை மின் மீற்றர்கள் உடல் நலனுக்கு தீங்கு விளைவிப்பதில்லை என்பதை சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளதோடு, அவை சேகரிக்கும் தரவுகளை மூன்றாம் தரப்பினருக்கு கொடுக்க இயலாது என்றும் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்