பிரான்சில் பணியாளை அடித்து காலை முத்தமிட வைத்த சவுதி இளவரசிக்கு பத்து மாதங்கள் சிறை?

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

சவுதி பட்டத்து இளவரசர் Mohammed bin Salmanஇன் சகோதரியான சவுதி இளவரசி Hassa bint Salman (43), பாரீஸில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் பழுது பார்க்கும் வேலை செய்ய வந்த நபர் தன்னை புகைப்படம் எடுத்ததாகக் கூறி, தனது பாதுகாவலரை வைத்து அந்த பணியாளரை அடித்து உதைத்து, தனது காலில் முத்தமிட வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கில் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதையடுத்து அவருக்கு 10 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

என்றாலும் அதை அவர் உடனடியாக அனுபவிக்கத்தேவையில்லை (suspended sentence). தீர்ப்பைத் தொடர்ந்து அவர் நடந்து கொள்ளும் விதத்தின் அடிப்படையில், அவர் சிறை செல்லவேண்டுமா அல்லது தண்டனை ரத்து செய்யப்படுமா என்பதை நீதிபதி முடிவு செய்வார்.

அத்துடன், இளவரசி Hassaவுக்கு 10,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள் இளவரசி Hassaவுக்கு ஆறு மாதங்கள் சிறையும் 5,000 யூரோக்கள் அபராதமும் விதிக்குமாறு கேட்டுக்கொண்ட நிலையிலும், அதை ஏற்க மறுத்த நீதிபதி, அவருக்கு 10 மாத சிறைத்தண்டனையும் 10,000 யூரோக்கள் அபராதமும் விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதே நேரத்தில் இளவரசியின் உத்தரவுப்படி அவரை தாக்கிய, இளவரசியின் பாதுகாவலர் Rani Saidiக்கு 8 மாத சிறைத்தண்டனையும் (suspended sentence) 5,000 யூரோக்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வழக்கு விசாரணையின்போது ஒரு முறை கூட இளவரசி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவரது வழக்கறிஞர் மட்டுமே ஆஜராகியிருந்த நிலையில், இளவரசி இல்லாமலேதான் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Ashraf Eid என்னும் அந்த பணியாள் கூறும்போது, தன்னை இளவரசியின் பாதுகாவலர் அடித்து உதைக்கும்போது, இளவரசி, அந்த நாயைக் கொல், அவனுக்கெல்லாம் வாழ தகுதியே இல்லை என்று கூறியதாக தெரிவித்திருந்தார்.

தற்போது தீர்ப்பைக் கேட்ட Eidஇன் வழக்கறிஞரான Georges Karouni, சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்பதற்கு ஆதாரமாக இந்த தீர்ப்பு அமைந்துள்ளது என்றார்.

இந்த வழக்கை நீதிமன்றத்தின் முன் கொண்டு வந்த தனது கட்சிக்காரரின் தைரியத்திற்கு தான் தலை வணங்குவதாக தெரிவித்தார் அவர்.

AP Photo/Thibault Camus

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்