பிரான்ஸ் நாட்டவர்கள் இத்தாலி கடற்கரையில் செய்த செயல்: ஆறு ஆண்டுகள் வரை சிறை செல்லலாம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் இத்தாலி கடற்கரையில் செய்த ஒரு சிறு செயலால், அவர்கள் ஆறு ஆண்டுகள் வரை சிறை செல்லும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இத்தாலியத் தீவான Sardiniaவின் கடற்கரை ஒன்றிற்கு சென்ற பிரெஞ்சு சுற்றுலாப் பயணிகள் இருவர், அங்கிருந்து 40 கிலோகிராம் மணலை எடுத்துச் சென்றதற்காக, சிறை செல்லும் அபாயத்திலுள்ளனர்.

Chia கடற்கரையிலிருந்து 14 பெரிய பிளாஸ்டிக் போத்தல்களில் சேகரிக்கப்பட்ட மணலுடன் அந்த இருவரும் பிரான்சுக்கு திரும்ப முயலும்போது, அவர்கள் எல்லையில் பொலிசாரிடம் சிக்கினார்கள்.

ஒரு ஞாபகார்த்தப் பொருளாகத்தான் மணலை எடுத்துச் செல்வதாகவும், தாங்கள் செய்தது குற்றம் என்பதை உணரவில்லை என்றும் அவர்கள் பொலிசாரிடம் தெரிவித்தனர்.

ஆனால் அவர்கள் ஒன்று முதல் ஆறு ஆண்டுகள் வரை சிறை செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

Sardiniaவின் கடற்கரைகள் உருவாகுவதற்கு பல மில்லியன் ஆண்டுகள் ஆனதாக கருதப்படும் நிலையில், அங்கிருந்து மணலை அள்ளிச் செல்வதால், கடற்கரைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், அதிகாரிகள் சமீப காலமாக மணல் அள்ளுவதற்கு எதிராக கடும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்கள்.

மணல் எடுத்துச் செல்வோருக்கு 3,000 யூரோக்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிப்புப் பலகைகள் கடற்கரையில் ஆங்காங்கு வைக்கப்பட்டுள்ள நிலையில், தாங்கள் செய்வது குற்றம் என்பதை உணராத பலரும் மணலை அள்ளிச் செல்கின்றனர்.

அப்படி மணலை எடுத்துச் செல்பவர்கள் பலர் சுற்றுலாப் பயணிகளாக இருப்பதால், அவர்களைப் பிடித்து அபராதம் விதிப்பது பொலிசாருக்கு பெரும் சவாலாக உள்ளது.

இதில் இன்னொரு பக்கம், மணலை அள்ளிச்செல்வது குற்றம் என தெரியவந்ததையடுத்து, 29 ஆண்டுகளுக்கு முன் மணலை அள்ளிச் சென்ற ஒரு பெண் உட்பட, சிலர் மன்னிப்புக் கோரியுள்ளதோடு, மணலையும் பத்திரமாக அதிகாரிகளுக்கு திருப்பி அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்