பிரான்சிலிருந்து விமானப்பயணம் மேற்கொள்வோர் கவனத்திற்கு... உங்கள் விமான டிக்கெட்டின் விலை உயர இருக்கிறது.
பிரான்ஸ் அரசாங்கம், விமான டிக்கெட்களின் மீது 18 யூரோக்கள் வரை வரி விதிக்க உள்ளதையடுத்து, பிரான்சிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களின் டிக்கெட்களின் விலையும் உயர இருக்கிறது.
ஆனால் நீங்கள் மாசு பிரச்சினை குறித்த அக்கறையுடையவர் என்றால் உங்களுக்கு இந்த செய்தி சற்று ஆறுதல் அளிக்கக்கூடும்.
ஏனென்றால், இந்த வரி விதிப்பின் மூலம் வரும் வருவாய் மாசு குறைவான போக்குவரத்து திட்டம் ஒன்றிற்கு நிதியுதவி செய்வதற்காகத்தான் செலவிடப்பட இருப்பதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
2020இல் அமுலுக்கு வரும் இந்த புதிய வரி விதிப்பு திட்டத்தின்படி, எக்கானமி வகுப்பு டிக்கெட்டின் மீது 1.5 யூரோக்கள் வரி விதிக்கப்படும் என்றும், அதிகபட்ச வரி பிசினஸ் வகுப்புக்கு விதிக்கப்பட உள்ளது என்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் Elisabeth Borne தெரிவித்துள்ளார்.
இந்த புதிய திட்டத்தால் ஆண்டொன்றிற்கு சுமார் 182 மில்லியன் யூரோக்கள் வருவாய் கிடைக்கும் என்றும், இந்த வருவாய் பசுமை போக்குவரத்து உள்கட்டமைப்பிற்கு, முக்கியமாக ரயில்வே துறைக்கு பயன்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்த வரி விதிப்பு பிரான்சிலிருந்து புறப்படும் விமானங்களுக்குத்தானேயொழிய, பிரான்சுக்குள் வரும் விமானங்களுக்கு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.