சாலையைக் கடக்கும் பார்வையற்ற நபர் மீது தாக்குதல்: ஒரு வைரல் வீடியோ!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பாரீஸில் தனது நண்பரின் உதவியுடன் சாலையைக் கடக்கும் பார்வையற்ற ஒருவரிடம் கார் ஓட்டுநர் ஒருவர் சண்டையிடும் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.

நேற்று ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில், கண் பார்வையற்ற தனது நண்பர் சாலையைக் கடக்க உதவுகிறார் ஒருவர்.

அப்போது பாதசாரிகள் கடக்கும் இடம் என்று தெரிந்தும் வேகமாக ஒரு கார் அவர்களுக்கு நெருக்கமாக செல்ல, கையில் பார்வையற்றோர் வைத்திருக்கும் குச்சியால் தற்செயலாக காரில் தட்டுகிறார் அந்த பார்வையற்றவர்.

உடனடியாக அந்த கார் நிற்க, அதிலிருந்து இறங்கும் ஒரு நபர், ஏன் எனது காரை அடித்தாய் என அவர்கள் இருவரிடமும் சண்டை போடுகிறார்.

அதற்கு அந்த பார்வையற்றவரின் நண்பர், ஏனென்றால், நீங்கள் பாதசாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய, பாதசாரிகள் சாலையை கடக்கும் பகுதியை தாண்டி சென்றீர்கள் என்று பதிலளிக்கிறார்.

சற்றும் எதிர்பாராதபோது அந்த பார்வையற்றவரின் நண்பரின் முகத்தில் சரமாரியாக தாக்குவதோடு, அந்த பார்வையற்றவரையும் அடிக்கப் பாய்கிறார் அந்த காரில் வந்தவர்.

அதற்குள் மக்கள் கூட, சிலர் அவர்களது சண்டையை விலக்கப்பார்க்கிறார்கள்.

அதில் ஒருவர் பொலிசாரை அழைப்போம் எனக்கூற, உடனடியாக காரில் ஏறி விரைகிறார் காரில் வந்தவர்.

அவ்வழியே சைக்கிளில் வந்த ஒருவர் தனது தலையில் அணிந்திருந்த கெமராவில் இந்த காட்சியை படம் பிடித்துள்ளார்.

அவர் அந்த வீடியோவை ட்விட்டரில் பதிவேற்றம் செய்ய, அது வைரலாகியுள்ளது. வீடியோவைப் பார்த்த பலரும், அந்த காரில் வந்தவரின் நடத்தை தங்களை ஆச்சரியப்படுத்தவில்லை என்கின்றனர்.

காரணம், வழக்கமாகவே பாரீஸில் வாகனங்களில் பயணிப்போர் பாதசாரிகள் கடக்கும் இடத்தை கண்டு கொள்வதே இல்லையாம்.

கடந்த ஆண்டு, பிரான்ஸ் அரசாங்கம், பாதசாரிகள் சாலையைக் கடக்கும் இடத்தை மதிக்காதவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கும் சட்டங்களைக் கொண்டு வந்தது.

2016ஆம் ஆண்டு சுமார் 559 பாதசாரிகள் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

என்றாலும், மொத்த பழியையும் வாகன ஓட்டுநர்கள் மீது போட்டு விட முடியாது, காரணம், 2017ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று, 40 சதவிகித பிரான்ஸ் நாட்டவர்கள், சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போதே சாலையைக் கடக்கிறார்கள் என்று தெரிவிக்கிறது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்