பிரான்ஸ் பிரெஞ்சு மக்களுக்கானதல்ல: சர்வதேச விமான நிலையத்தை முற்றுகையிட்ட புலம்பெயர்ந்தோர்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

பிரான்சின் சர்வதேச விமான நிலையம் ஒன்றில் திடீரென நுழைந்த புலம்பெயர்ந்தோரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரான்ஸ் நாட்டின் முக்கிய விமான நிலையங்களில் ஒன்றான Charles De Gaulle விமான நிலையத்திற்குள் திடீரென நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தோர் நுழைந்து, ஏர் பிரான்ஸ் விமான நிறுவனம் மூலம் பலர் நாடு கடத்தப்படுவதற்கு எதிராகவும், தங்களுக்கு நிரந்தர வாழிட உரிமம் அளிக்க கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ட்விட்டரில் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோ ஒன்றில், புலம்பெயர்ந்தோர் ஆதரவாளர்கள் குழு ஒன்றைச் சேர்ந்த சுமார் 500 பேர் விமான நிலையத்தில் கூடியிருப்பதைக் காணலாம்.

நாடு கடத்தப்படுவது தொடர்பான நிதி உதவி முதல், அரசியல் பங்களிப்பு வரை அனைத்தையும் நிறுத்துமாறு ஏர் பிரான்ஸ் நிறுவனத்துக்கு எதிராக அவர்கள் குரல் எழுப்பினர்.

அத்துடன் ஏர் பிரான்ஸ் நிறுவனத்தின் தலைவர்களையும், பிரான்ஸ் பிரதமர் எட்வர்ட் பிலிப்பையும் சந்திக்கவும் அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

தாங்கள் பிரான்சிலுள்ள ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோருக்கான மிகப்பெரும் யூனியனைச் சேர்ந்தவர்கள் என்று கூறும் இவர்கள், தங்களை கருப்பு மேலாடைக்காரர்கள் என்று அழைத்துக் கொள்கிறார்கள்.

வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், போராட்டக்காரர்களில் ஒருவர், ‘பிரான்ஸ் பிரெஞ்சு மக்களுக்கானது அல்ல, இங்கு வாழ எல்லோருக்கும் உரிமை உள்ளது’ என்று குரல் எழுப்புவதைக் கேட்க முடிகிறது.

ஆப்பிரிக்காவைச் சேர்ந்த அந்த போராட்டக்காரர்கள், பிரதமருக்கு அழைப்பு விடுத்து, தங்களுக்கு நிரந்தர வாழிட அந்தஸ்து அளிக்குமாறும் பிரான்சில் வாழ தேவையான ஆவணங்களை அளிக்குமாறும் கோரி சத்தமிடுவதையும் கேட்க முடிகிறது.

போராட்டக்காரர்களை ஏர் பிரான்ஸ் நிறுவன பிரதிநிதிகள் சந்தித்ததாக உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் போராட்டக்காரர்களில் ஒருவர் தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என்று அதே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

நாங்கள் தற்போதைக்கு ஏர் பிரான்சைக் குறி வைத்துள்ளோம், எங்கள் நடவடிக்கைகள் மேலும் தொடரும் என்றார் அவர்.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers