மஞ்சள் மேலாடை போராட்டங்கள்: முக்கிய அறிவிப்புகளை வெளியிடும் மேக்ரான்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

மஞ்சள் மேலாடை போராட்டங்கள் தொடர்பான பல மாத கூட்டங்களுக்குப் பிறகு, அரசின் புதிய கொள்கைகள் குறித்து இன்று முக்கிய அறிவிப்புகளை பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் வெளியிட இருக்கிறார்.

இன்று இரவு 8 மணியளவில் நாட்டு மக்களுக்கு மேக்ரான் உரையாற்ற இருக்கிறார்.

ஜனவரிக்கும் மார்ச்சுக்கும் இடையில் நடந்த பல கூட்டங்களுக்குப்பின் ஆன்லைனில் பெறப்பட்ட மக்களின் குறைகள் தொடர்பான புகார்களுக்கு முதன்முறையாக சரியான முடிவுகளை மேக்ரான் எடுக்க இருப்பதாக மேக்ரானின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐந்து மாதங்களாக அரசுக்கு எதிராக நடந்த வன்முறைப் போராட்டங்களுக்கு காரணமான மக்களின் கோபத்தை சாந்தப்படுத்தும் விதத்தில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் புதிய சட்டம் ஒன்று மேக்ரானின் இரண்டாண்டு ஆட்சிக்காலத்தில் முதன்முறையாக கொண்டுவரப்பட இருப்பதாக ஜனாதிபதி மாளிகை அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

போராட்டங்களையடுத்து மக்களின் கோபத்தை பிரச்சினைகளுக்கு தீர்வாக மாற்றும் நோக்கில், நாடு முழுவதும் மேக்ரான் ஏராளமான கூட்டங்களில் பங்கேற்றதோடு, என்ன செய்யலாம் என்பதை கேள்விகளாக்கி மக்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை அறியும் முயற்சியில் இறங்கினார்.

இன்னும் மஞ்சள் மேலாடை போராட்டக்காரர்களின் கோபம் தணியாத நிலையில், வரும் ஈஸ்டர் பண்டிகை வார இறுதியிலும் தொடர்ந்து பெரிய போராட்டங்களுக்கு அவர்கள் திட்டமிட்டுள்ளதையடுத்து, அவர்களது கோபத்தை தணிக்க வேண்டிய கட்டாயத்தில் மேக்ரான் இருக்கிறார்.

மக்களிடமிருந்து பெறப்பட்ட பதில்களிலிருந்து அவர்களது முக்கிய தேவை வரி குறைப்பு என்பது தெரிய வந்துள்ளதையடுத்து, வரி குறைப்பு குறித்த முக்கிய அறிவிப்புகள் இன்றைய ஜனாதிபதி உரையில் இடம்பெறலாம் என பிரதமர் எட்வர்ட் பிலிப் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் போராட்டக்காரர்கள் பலர் மேக்ரானின் அறிவிப்புகள் எதுவுமே வெறும் பேச்சாகத்தான் இருக்கும் என ஏற்கனவே அதை நிராகரித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers