பிரான்ஸ் கடல்பகுதியில் பற்றி எரியும் கப்பல்: கடற்கரையில் எண்ணெய் பரவும் அபாயம்!

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

இத்தாலிய கப்பல் ஒன்று பிரான்ஸ் கடல்பகுதியில் தீப்பற்றியதைத் தொடர்ந்து, அதிலிருந்து வெளியேறிய எண்ணெய் கடற்கரையில் பரவும் அபாயம் இருப்பதால், அதை தடுத்து நிறுத்தும் முயற்சியில் பிரான்ஸ் அதிகாரிகள் தீவிரமாக இறங்கியுள்ளனர்.

கப்பலுக்கு சொந்தமான Grimaldi Lines என்னும் நிறுவனம், அந்த கப்பலில் 365 கண்டெய்னர்கள் இருந்ததாகவும், அவற்றில் 45இல் அபாயகரமான ரசாயனங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.

அதில் 10 டன் ஹைட்ரோகுளோரிக் அமிலமும், 70 டன் கந்தக அமிலமும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த கப்பல் விபத்துக்குள்ளாகும் முன் அதில் 2,200 டன் எண்ணெய் இருந்ததாக பிரான்சின் சுற்றுச்சூழல் துறைக்கு பொறுப்பான அமைச்சர் Francois de Rugy தெரிவித்திருக்கிறார்.

விபத்து நடந்தபின், கடலில் சுமார் 10 கிலோமீற்றர் நீளத்திற்கும் ஒரு கிலோமீற்றர் அகலத்திற்கும் எண்ணெய் பரவியுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடலில் ஏற்பட்டுள்ள எண்ணெய்க் கசிவை கட்டுப்படுத்துவதற்காக நான்கு கப்பல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, கரையிலும் சுத்தம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கி மூழ்கிய Grande America என்ற பெயர் கொண்ட அந்த கப்பலிலிருந்து 27 பேரை மீட்டுள்ளதாக பிரான்ஸ் அரசு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...