அகதிகளை பிரான்சுக்கு திருப்பி அனுப்பும் பிரித்தானியா: மற்ற நாடுகளுக்கு பாடம் என்கிறது

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

அக்டோபர் மாதத்தில் பிரித்தானிய கரையில் இறங்கிய, புகலிடம் மறுக்கப்பட்ட அகதிகளில் சிலரை, பிரித்தானியா நேற்று பிரான்சுக்கு திருப்பி அனுப்பியுள்ளது.

அத்துமீறி அபாயகரமாக நாட்டுக்குள் நுழைபவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கும் என்று அது தெரிவித்துள்ளது.

பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் செய்யப்பட்ட ஒரு ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவுக்குள் நுழைபவர்களை தடுப்பதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக, பிரித்தானியாவுக்கு கூடுதலாக 3 மில்லியன் பவுண்டுகள் செலவு பிடிக்கும். நேற்று, ஐந்து பேருக்கும் குறைவான அகதிகளே பிரான்சுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிகிறது.

அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றோ, அவர்கள் எப்படி பிரித்தானியாவுக்குள் வந்தார்கள் என்றோ பிரித்தானிய உள்துறை அமைச்சகம் தெரிவிக்க மறுத்துவிட்டது.

திடீரென, கடந்த ஆண்டு இறுதியில் ஆங்கிலக் கால்வாயைக் கடப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் அமைச்சர்களுடனான பேச்சு வார்த்தைகளையடுத்து பேசிய பிரித்தானிய உள்துறை செயலரான Sajid Javid, இன்றைய கூட்டு நடவடிக்கை, ஏற்கனவே வலுவாக இருக்கும் எங்கள் உறவை இன்னும் வலுப்படுத்துவதோடு, எங்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லைகளை பாதுகாப்பதற்கும், அபாயகரமாக ஆங்கிலக் கால்வாயை கடப்பவர்களை மட்டுப்படுத்துவதற்குமான கூட்டு நடவடிக்கைகளையும் அதிகரிக்கும் என்றார்.

கடந்த ஆண்டு 539 பேர் சிறு படகுகள் உதவியுடன் பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற நிலையில், கடந்த மூன்று மாதங்களில் மட்டுமே 434 பேர், அதாவது 80 சதவிகிதம் பேர் ஆங்கிலக் கால்வாய் வழியாக பிரித்தானியாவுக்குள் நுழைய முற்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்