குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் நேப்பியில் அபாயகரமான ரசாயனங்கள்: பிரான்ஸ் அதிகாரிகள்

Report Print Balamanuvelan in பிரான்ஸ்

குழந்தைகளுக்கு அணிவிக்கப்படும் நேப்பியில் அபாயகரமான ரசாயனங்கள் இருப்பது தெரியவந்துள்ளதாக பிரான்ஸ் தேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அவற்றில் சர்ச்சைக்குரிய களைக்கொல்லியான, மனித உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடிய, glyphosate முதலான ரசாயனங்கள் உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இந்த ரசாயனங்கள், குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பதால் விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு ஆய்வு செய்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் பிரான்சின் சுகாதாரத்துறை அமைச்சரான Agnès Buzyn, குழந்தைகள் நலனுக்கு உடனடி ஆபத்து எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் சுகாதாரம், நிதி மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்கள் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், நேப்பி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு தக்க நடவடிக்கை எடுப்பதற்கு 15 நாட்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Glyphosate புற்று நோயை ஏற்படுத்தக்கூடும் என உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

ஆனால், அது ஐரோப்பா முழுவதிலும் பரவலாக ஒரு களைக்கொலியாக பயன்படுத்தப்படுகிறது, மட்டுமின்றி, ஐரோப்பிய ஒன்றிய அலுவலர்கள் அது புற்றுநோயை ஏற்படுத்தலாம் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கின்றனர்.

Glyphosate 2021 வாக்கில் தடை செய்யப்பட இருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் நேப்பியில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ள விடயம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers