பாலியல் பலாத்கார வழக்கு! பாரிசில் கைதான பிரபல பாடகர் விடுவிப்பு

Report Print Kabilan in பிரான்ஸ்

பிரான்சின் பாரிஸ் நகரில் கைது செய்யப்பட்ட பிரபல அமெரிக்க பாடகர் கிறிஸ் பிரவுன் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

பாரிஸ் நகரில் 24 வயது பெண்ணொருவர் தனது தோழியை சந்திக்க ஓட்டலுக்கு வந்ததாகவும், அப்போது அமெரிக்க பாடகர் கிறிஸ் பிரவுன் அவரது நண்பர் மற்றும் மெய்க்காப்பாளருடன் சேர்ந்து தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குற்றஞ்சாட்டினார்.

அதனைத் தொடர்ந்து பாரிஸ் பொலிசார் கிறிஸ் பிரவுன், அவரது நண்பர் மற்றும் மெய்க்காப்பாளர் ஆகியோரை கைது செய்தனர். ஆனால், இந்த வழக்கினை எடுத்துக் கொள்ளாமல் காவலில் வைக்கப்பட்ட முதல் காலகட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நீதிபதி முடிவு செய்தார்.

அதன்படி கிறிஸ் பிரவுன் விடுவிக்கப்பட்டார். எனினும் பிரெஞ்சு சட்டப்படி இந்த வழக்கு இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது. அதாவது ஆரம்பகட்ட காவல் என்பது 48 மணிநேரம் நீடிக்கும். அதன் பின்னரே விசாரணை தொடங்கப்படலாம் அல்லது அவர்கள் விடுவிக்கப்படலாம்.

இதன் அடிப்படையிலேயே பிரவுன் விடுவிக்கப்பட்டாலும், விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியில் வந்த பிரவுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தன் மீது சுமத்தப்பட்ட பொய்யான வழக்கு இது எனவும், இதனை தாம் தெளிவுபடுத்த வேண்டியது அவசியம் எனவும் பதிவிட்டார்.

மேலும், தன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவே இவ்வாறு அவதூறு புகார் கூறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், பிரவுனின் வழக்கறிஞர் அவர் மீது எந்த வழக்கும் பதியப்படவில்லை என்றும், தன் மீது பொய் குற்றச்சாட்டு சுமத்திய பெண்ணின் மீது பிரவுன் அவதூறு வழக்கு தொடர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

பாரிசில் உள்ள அமெரிக்க தூதரகம் இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers